T2021ல் நான் தான் முதல்வர்: வடிவேலு

Published On:

| By Balaji

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது என்று தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு 2021ல் நான் தான் சிஎம் என்று கூறியுள்ளார்.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (மார்ச் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது என்று குறிப்பிட்டதுடன் தனது அரசியல் வருகையையொட்டி மூன்று முக்கிய திட்டங்களை முன்வைத்தார். இதில், கட்சியின் தேவையான அளவு மட்டுமே பதவிகள் வழங்கப்படும், 50 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கட்சிப் பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே எனது திட்டம், நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் முதல்வர் பதவியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் வடிவேலுவும் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த வடிவேலு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்த அவரிடம் ரஜினியின் நேற்றைய பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த வடிவேலு, அவர் அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஏன் அவருக்கே கூட தெரியாது. அவர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்றார்.

மேலும், என்னுடைய திட்டப்படி 2021 ஆம் ஆண்டு நான்தான் சிஎம். நான் எங்கு நின்றாலும் ஓட்டுப் போடுவீர்களா என்று நகைச்சுவையாகப் பேசினார்.

**கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share