uதடுப்பூசி போடாதவர்களுக்கு கிடுக்குப்பிடி!

Published On:

| By Balaji

மதுரையில் உள்ள விஷால் மாலில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள்,மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான பிறகு தற்போதுதான் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வைரஸ் அச்சமும் ஒரு காரணம்.

முதலில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர். தடுப்பூசி செலுத்தாதவர்களைஅனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் விஷால் டி என்ற தனியார் மால் உள்ளது. இந்த மாலில் 60க்கும் மேற்பட்ட கடைகளும், ஐந்து திரையரங்குகளும் உள்ளன. சாதாரண நாட்களில் 7 ஆயிரம் பேர் வரையும் விடுமுறை நாட்களில் 18 ஆயிரம் பேர் வரையும் மக்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் விஷால் டி மாலின் நுழைவு வாயிலில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை பார்த்து உறுதி செய்த பின்பே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதனையும், சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திய பின்பும்தான் உள்ளே அனுமதிக்கின்றனர்.

இதனால் தடுப்பூசி போடாதவர்கள் மாலுக்குள் செல்லமுடியாத ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share