vரிசர்வ் வங்கி: ஆளுநர் விலகலும், விளைவுகளும்!

public

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்த உர்ஜித் படேல் நேற்று (டிசம்பர் 10) தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தனது ராஜிநாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் பதவி விலகிய பிறகு உர்ஜித் படேல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

உர்ஜித் படேலின் பதவி விலகலுக்கு அவரது சொந்தக் காரணங்கள்தான் காரணமா? கடந்த அக்டோபர் மாதம் முதலாகவே அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் பனிப் போர் மூண்டுவிட்டது. அக்டோபரில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வீரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்துக்கு அரசு கொடுக்கும் நெருக்கடி பற்றிப் பேசியிருந்தார். அக்டோபர் 26ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வீரல் ஆச்சார்யா, “மத்திய வங்கியின் சுதந்திரத்தை குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும். மத்திய வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள் நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதாரத் தீயை மூட்டி, மத்திய வங்கியின் அதிகாரங்களைக் குறைத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படும்” என்று பேசியிருந்தார். அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான போர் இதன் பிறகு தீவிரமடைந்தது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைமுகமாக ரிசர்வ் வங்கியையும், அதன் பொறுப்பாளர்களையும் குறி வைத்து விமர்சித்துவந்தார். கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளால் செயல்படாச் சொத்துகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டதாக அருண் ஜேட்லி உட்பட பாஜக சார்பு அதிகாரிகளும் விமர்சித்திருந்தனர். ரிசர்வ் வங்கிக்கு நிர்வாகக் குழு அமைத்து மூலதனக் கட்டமைப்பை உருவாக்க அரசு முயற்சித்ததெல்லாம் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை பிடுங்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது. ரிசர்வ் வங்கியைத் தனியார் நிறுவனம் போல நடத்துவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்திருந்தார்.

அப்போதிலிருந்தே அரசின் நெருக்கடி காரணமாக உர்ஜித் படேல் பதவி விலகுவார் என யூகிக்கப்பட்டது. இப்போது அவர் பதவி விலகியுள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தில், “சொந்தக் காரணங்களுக்காக எனது பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சேவையாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவும், கடும் உழைப்புமே ரிசர்வ் வங்கியின் சாதனைகளுக்கு காரணம். இந்த தருணத்தில் எனது சக ஊழியர்களுக்கும், ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவின் இயக்குநர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு அவர்களது எதிர்காலத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநரும், பொருளாதார வல்லுநர்களும் இந்தியாவில் நெருக்கடிக்குள்ளாவது இதுவே முதல்முறையா? இதற்கு முன்பே ரகுராம் ராஜன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், அரவிந்த் பனாகரியா ஆகியோர் அரசின் நெருக்கடிக்கு ஆளானவர்கள்தான். உலகளவிலும் இது முதன்முறையல்ல. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் கொள்கைகளை தொடர்ந்து தாக்கி வந்தார். உலக அளவில் பல நாடுகள் மத்திய வங்கிகளின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன.

ஒரு நாட்டின் பணவியல் கொள்கை அரசின் கையில் ஒப்படைக்கப்பட்டால், குறுகிய கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணவீக்கத்துக்கு உத்வேகம் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சுதந்திரமான ஒரு மத்திய வங்கியால் மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்து முதலீட்டாளர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறமுடியும். பணவீக்கம் குறைவாக இருந்தால் வட்டி விகிதமும் குறைவாக இருக்கும். அதன் விளைவாக வளர்ச்சிக்கு வழிவகை செய்யமுடியும். ஆனால் இந்தியாவில் நடப்பது போல ரிசர்வ் வங்கிக்கு அவமரியாதை செய்யப்படுவதும், அரசியல் அழுத்தம் கொடுப்பதும் நல்ல பலனை தராது. இதனால்தான் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அரசின் நலனுக்கும், பொது நலனுக்கும் அவசியமானதாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ரிசர்வ் வங்கியிடம் நிதி கேட்டு நெருக்கடி கொடுத்து சுதந்திரத்தை பறிக்க முயற்சிக்கிறது மோடி அரசு. ரிசர்வ் வங்கியின் மிகை நிதியை அரசுக்கு வழங்கும்படி மோடி அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. உர்ஜித் படேலின் பதவி விலகல் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவு என முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் ஆகியோரின் தலைமையில், அரசின் குறுக்கீடுகளையும் மீறி ரிசர்வ் வங்கி திறம்பட செயல்பட்டது. இனி அரசின் விருப்பத்திற்கு ஏற்ப ரிசர்வ் வங்கி நடப்பதாக முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் தோன்றினால், ரூபாயின் மதிப்பும், வட்டி விகிதங்களும் கட்டுக்குள் இல்லாமல் போய்விடும். ரிசர்வ் வங்கி மேலும் சுதந்திரமாக இயங்குமா அல்லது அரசின் கைப்பாவையாக மாறிவிடுமா என்பதைப் பொறுத்தே வளர்ச்சியும் இருக்கும்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *