vகேலிக்கூத்தாகும் அரசின் விளக்கம்: ஸ்டாலின்

public

நீ்ட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் 85 சதவிகித எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், எஞ்சிய 15 சதவிகித இடங்கள் ஏனைய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யும் அரசாணை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து நேற்று ஜூன் 25ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடைக்கால அரசை நடத்திக்கொண்டிருக்கிற திரு.எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு, பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசிடம் அடகுவைத்துக் கொண்டிருக்கிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்பதன் அடிப்படையில் திணிக்கப்படும் நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. இந்தத் தேர்வினால் பல்லாயிரக்கணக்கான ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியது. தான் அனுப்பிய தீர்மானத்தைச் சட்டமாக்குவதற்கு மத்திய அரசிடம் வாதாடி, உரிமையை நிலைநாட்டத் தவறிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசு, தனது துரோகத்தை மறைப்பதற்காக, குறுக்குவழியைக் கையாண்டு திசைதிருப்பும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது.

நீ்ட் மதிப்பெண்ணின் அடிப்படையில், 85 சதவிகித எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், எஞ்சிய 15 சதவிகித இடங்கள் ஏனைய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அரசாணை மாணவர்கள் நலனை எந்தவகையிலும் பாதுகாக்கப் போவது இல்லை. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கப்போவது இல்லை. ஏனென்றால், ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முன்னணி இடங்களைப் பெற்ற மாணவர்கள் பலரும், நீட் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ப்ளஸ் டூ மதிப்பெண்ணை முற்றாக ஒதுக்கிவிட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் செய்யப்படும் அநீதியாகும். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிவிட்டு, அதே நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கிறோம், மாநில நலனைப் பாதுகாக்கப் போகிறோம் என்று தமிழக அரசு தரும் விளக்கம் முரண்பாடாக உள்ளது. இதுகுறித்த என்னுடைய மூன்று கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்.

1. நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு என்று அதிமுக சார்பில் நிபந்தனை விதிக்காதது ஏன்? நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரை அனுப்பி வைக்காத மத்திய அரசைக் கண்டிக்காமல் இருப்பது ஏன்?

2. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில், 10 சதவிகிதத்துக்குக் குறைவான அளவிலான மாணவர்களே சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிரிவினருக்கு 15 சதவிகித இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன?

3. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று, சாதனைப் படைத்த மாணவர்கள்கூட, நீட் தேர்வில் சொற்பமான மதிப்பெண்ணைப் பெற்றுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்குக் கிடைக்கப்போகும் பரிகாரம் என்ன? மாநிலப் பாடத்திட்டத்தில் மிக அதிக மதிப்பெண் எடுத்தவர்களை வஞ்சித்து விட்டு, தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசாணை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது? தமிழக அரசின் இந்த அரசு ஆணையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அனுமதிக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன?

மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு, போர்க்கால நடவடிக்கையை எடுப்பதும், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்துவதும்தான் இதற்கு ஒரே தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *