8
தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி கவனம் பெற்று வரும் நிவேதா பெத்துராஜ் சில தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகைகள் பாலிவுட் சென்று படங்கள் நடிக்க ஆர்வம் காட்டுவர். ஆனால் நிவேதா வைக்கும் குறி அதையும் தாண்டி ஹாலிவுட்டை நோக்கி உள்ளது.
நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது ஜகஜால கில்லாடி, பார்ட்டி, பொன்மாணிக்க வேல் என அடுத்தடுத்து படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகிவருகின்றன. தற்போது விஜய்சேதுபதியுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வாலு, ஸ்கெட்ச் போன்ற திரைப்படங்களை இயக்கிய விஜயசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள படப்பிடிப்பை எதிர்பார்த்துள்ளார் நிவேதா.
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தபின் நிவேதா மே அல்லது ஜூன் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு ஹாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளை தேடவுள்ளார். பாலிவுட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றுள்ளனர். ஹாலிவுட்டில் நடித்துக்கொண்டே இந்தியிலும் படங்களில் நடித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் துபாயில் தான் வளர்ந்தார். மாடலாக தன் பயணத்தைத் தொடங்கிய அவர் நடிப்பு பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வரும் நிலையில் தன் இலக்கின் உயரத்தை இதன் மூலம் அதிகரித்துள்ளார்.�,