vஸ்டாலின் செய்ததும் மற்றவர்கள் செய்யாததும்!

Published On:

| By Balaji

டி.எஸ்.எஸ்.மணி

இந்தியாவின் மக்களவைத் தேர்தல்கள் மக்களவை உறுப்பினர்களைத்தான் தேர்ந்தெடுக்கும். அந்த உறுப்பினர்கள்தான் தலைமை அமைச்சரைத் தேர்வு செய்வார்கள். இதுதான் நமது நாட்டின் நாடாளுமன்ற முறை. ஆனால், உலகெங்கும் பல நாடுகளிலும் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், நாட்டின் அதிபர் நேரடியாகவே மக்களால் தேர்வு செய்யப்படுகிறார். அத்தகைய நாடுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், அதிபரை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே, அமெரிக்காவில் தொடங்கி, இலங்கை வரை இருக்கிறது. இத்தகைய முறை நமது நாட்டில் இல்லை. மக்கள் நேரடியாகப் பிரதமரையோ அதிபரையோ தேர்ந்தெடுப்பதில்லை.

ஆனால், பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மோடியை முன்னிறுத்தும்போது, எதிர்க்கட்சிகள் ஏன் அப்படி ஒருவரை முன்னிறுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. அது இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறையின்படியானது இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியாகவே பதில் கூறின. ஆனாலும் பின்தங்கிய மக்களை வாக்காளர்களாகக் கொண்ட நமது நாட்டில் பெரும்பான்மை வாக்காளர்கள் மத்தியில், அவருக்கு எதிராக இவர் அல்லது அவருக்கு எதிராக எவர் என்ற கேள்வி எழத்தானே செய்யும்? அத்தகைய சூழலில்தான்,, திமுக தலைவர் ஸ்டாலின் ராகுலைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் உட்படப் பலர் அத்தகைய அறிவிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், ஸ்டாலின் ஏன் அப்படி அறிவித்தார்?

**அனுபவம் தந்த பாடம்**

1980ஆம் ஆண்டின் அனுபவம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி சேர்ந்து மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த நேரம் அது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக இரண்டே இடங்களைத்தான் பெற்றது. தமிழ்நாட்டு மக்கள் மக்களவைத் தேர்தல் வேறு, மாநிலத்திற்கான தேர்தல் வேறு என்ற புரிதலைக் கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆர். பின்னால் நிற்கும் வாக்காளர்களும் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்களித்தார்கள். ஏன் அப்படி என்று கிராமப்புறத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஆதரவாளர்களிடம் கேட்டதற்கு, “சூரியனுக்குப் போட்டால்தான், மேலே கை வருமாமே?” என்று கூறினார்கள் என்பது பிரபலமான கூற்று.

மத்தியில் ஆட்சி மாறியது. எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது. உடனே சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். கட்சி வெற்றி பெற்றது. மக்கள் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு வேறு முடிவை எடுத்தார்கள்.

அந்த அனுபவம் தந்த பாடம்தான் ஸ்டாலினுக்கு இப்போது கை கொடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஒரு தேசியக் கட்சிக்கு எதிராக இன்னொரு தேசியக் கட்சியின் தலைவரை முன்னிறுத்த வேண்டும் என்பது ஸ்டாலினுக்குப் புரிந்திருந்தது. மோடிக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் தமிழ்நாட்டு வாக்காளர்கள் உளவியல் ரீதியாக, அதற்கு எதிராக உள்ள ராகுல் தலைமையிலான கூட்டணியைத் தேர்வு செய்ய முனைவார்கள் என்று திமுக கணக்குப் போட்டது. அதனால்தான் ராகுலைப் பிரதமர் வேட்பாளராகத் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

1980இல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு, புதுவை இரண்டிலும் சேர்த்து 21 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அக்கட்சி அவற்றில் 19இல் வென்றது. கலைஞர் தலைமையிலான திமுக, (ஐ.யு.எம்.எல். உட்பட) 19 தொகுதிகளில் நின்று 17இல் வென்றது (திமுக 16, ஐ.யு.எம்.எல். 1). புதுவையில் நின்ற காங்கிரஸ் அங்கே வென்றது. அதிமுக வெற்றி பெற்ற கோபி, சிவகாசி இரண்டும் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்ட தொகுதிகள்.

அதே செயல் தந்திரம் இப்போதும் பின்பற்றப்பட்டது. அதுவே, தமிழ்நாட்டு வாக்காளர்களை ஒரு காந்தம் போல ஈர்த்தது. அதுவே திமுக கூட்டணிக்கு 37 தொகுதிகளைக் கொடுத்துள்ளது. பாஜக, அதிமுக இரண்டையும் எதிர்க்கக்கூடிய தமிழ்நாட்டு வாக்காளர்களின் வாக்குகளை இழுக்க வலுவான கூட்டணியை திமுக ஏற்படுத்தியது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, ஐ.யு.எம்.எல்., ஐ.ஜே.கே., கொ.ம.தே..க. ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்தது. தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 20 தொகுதிகளிலும், 1980ன் கணக்குப்படியே நிறுத்தப்பட்டார்கள். இதன் மூலம்தான் வெற்றி கிட்டியுள்ளது. இது ஸ்டாலின் செயல் தந்திரத்திற்கான வெற்றி.

அத்தகைய ஒரு செயல் தந்திரத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றவில்லையே என்ற ஆதங்கத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.விஜயதரணி வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அப்படித் திரண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம். ஸ்டாலினின் செயல் தந்திரத்தைப் பிற மாநில எதிர்க்கட்சிகளும் கடைப்பிடித்திருந்தால் இன்று மோடி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

**

[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share