கோவை வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை என்று தமிழக வனத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வெள்ளையங்கிரி மலை கடல் பரப்பில் இருந்து 6,000 அடி உயரத்தில் உள்ளது. கார்த்திகை நாளில் 1,000 லிட்டர் நெய் கொண்டு செல்லப்பட்டு, இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்காக தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் பலர் கட்டாய பணம் வசூலில் ஈடுபடுகின்றனர். தங்கள் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குச் செல்ல பலரை அனுமதிக்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால் காடுகள் அழிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையும் உருவாகியுள்ளது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரங்கணி தீ விபத்து போன்ற பிரச்சினைகள் வெள்ளியங்கிரி வனப்பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. “கார்த்திகை தீப நிகழ்ச்சி நேரத்தில் வெள்ளியங்கிரி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்காக ஏற்பாடுகள் கூட இல்லாத நிலை உள்ளது. எனவே, வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு மக்கள் வருவதை அனுமதிக்கக் கூடாது. வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடக்கும் கார்த்திகை தீப நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று செந்தில் குமார் கோரிக்கை விடுத்தார்.
நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று (நவம்பர் 22) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வெள்ளியங்கிரி வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அங்குள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை. ஆனால் கோவிலில் வழிபாடு நடத்த மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று தமிழக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.�,”