கர்நாடகாவிலுள்ள விவசாயிகள் மற்றும் முதியோர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி.
மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேர்தல் அறிக்கை, நேற்று (மே 7) பெங்களூருவில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டுப் பேசிய மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநிலத்தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான ஹெச்.டி.குமாரசாமி, விவசாயிகளுக்கு விதைகளையும் உரங்களையும் இலவசமாக வழங்குவோம் எனத் தெரிவித்தார்.
“மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைந்தால், 24 மணி நேரத்துக்குள் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் நல ஆலோசனைக்குழு அமைக்கப்படும். இதற்காக, மாநிலத்தின் 30 மாவட்டங்களில் இருந்தும் தலா இரண்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று கூறினார். கடந்த வாரம் வெளியான பாஜக தேர்தல் அறிக்கையிலும், விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கள் கட்சியின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெற்றுப் பேச்சல்ல என்றும், இதற்காக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் களப்பணியாற்றித் தகவல்கள் சேகரித்துள்ளனர் என்றும் தெரிவித்தார் குமாரசாமி.
“பெண்களின் பிரசவத்துக்கு முன்னும் பின்னும் மூன்று மாதங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவச மின்சார சேவை அளிக்கப்படும். இந்தக் குடும்பங்களுக்கு மாதம்தோறும் 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை தரப்படும். இதுதவிர கைம்பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும்” என்பது உட்பட பல அம்சங்கள் தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார் குமாரசாமி. இதன் மூலமாக, மதச்சார்பற்ற ஜனதாதளமானது விவசாயிகள் மற்றும் முதியோர்களைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளது தெளிவாகியுள்ளது.
இது மட்டுமல்லாமல், “சித்தராமையா அரசு ஏற்படுத்தியுள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பு கலைக்கப்பட்டு, லோக் ஆயுக்தா வலுப்படுத்தப்படும். எல்லா அரசுப் பணியாளர்களின் சொத்து விவரங்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயது 60இல் இருந்து 65ஆக உயர்த்தப்படும். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போல, கர்நாடகாவிலும் அமைக்கப்படும். பெங்களூருவில் நான்கு அதி சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்படும்” என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கே பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்றும், இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பதவி குறைப்பு செய்யப்படுவார்கள் என்றும், மூன்று முறை தேர்ச்சி பெறாதவர்கள் ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்றும் மஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,