அரசுப் பணித் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக, ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உட்பட 11 பேரை உத்தரப் பிரதேசச் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பணிக்கான தேர்வினை அம்மாநில துணை நிலை பணித் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. நிலத்தடி நீர் பணியாளருக்கான 3,210 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வுக்காக, அம்மாநிலத்தில் 364 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் நேற்று (செப்டம்பர் 2) தேர்வு நடைபெற இருந்தது.
இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநில சிறப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 11 பேர் கொண்ட குழு ஒன்று வினாத்தாளைத் திருடி சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்தது.
அவர்களில் 5 பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என்பதும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சச்சின் சௌத்ரி என்பவர் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மீரட் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 11 பேரையும் சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு வினாத்தாளை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் வெளியீடு முறைகேடு தொடர்பாக, போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், இந்தத் தேர்வுக்கான புதிய தேதியை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.�,