vவாழ்க்கையையே நகைச்சுவையாகக் கருத முடியுமா?

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

ஒருவர் தனது வாழ்க்கையையே நகைச்சுவையாகக் கருத முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அறிதல் மிகக் கடினமானது. ஏனென்றால், நம்முடைய வாழ்வு எப்போதும் ஒரே மாதிரியானதாக இருக்காது. பிறப்பது முதல் இறப்பது வரை ஒவ்வொருவரும் தனக்கான சோகங்களை, சுகங்களை, வெற்றிகளை, தோல்விகளை, மேடு பள்ளங்களை, இவை தவிர்த்த வெறுமைகளை, சிறுமைகளைச் சந்தித்தே ஆக வேண்டும். ஒருவரது சூழல், மனநிலை, கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்து இவற்றின் வடிவங்களில் அளவுகளில் மாற்றம் ஏற்படலாம். இதைப் புறந்தள்ளிவிட்டு நேர்கோடு போன்ற வாழ்க்கை கிடைமட்டமாகவோ, செங்குத்தாகவோ கண்டிப்பாக எவருக்கும் அமையாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஆனால், கிடைக்கும் அனுபவங்களை, எதிர்கொள்ளும் வாழ்க்கையை எவ்வாறு உள்வாங்குகிறோம் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மறைந்த திரைக்கதை வசனகர்த்தாவும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட முறை தனது நாடகங்களை மேடையேற்றிய எழுத்தாளருமான கிரேசி மோகன், வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக்கொள்வது தனது வழக்கம் என்று அநேகம் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இந்த குணத்தினால் பல விஷயங்கள் தனக்கு நகைச்சுவையாகத் தோன்றியதாகக் கூறியுள்ளார். இந்த குணம் தனக்கு வாய்த்தது என்றும், இதேபோல எல்லாரும் இருக்க வேண்டுமென்பதில்லை என்றும், இது நல்லதா கெட்டதா என்று யோசிக்கும் அளவுக்கான வாழ்க்கை தனக்கு அமையவில்லை என்றும், அந்தப் பேட்டிகளில் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் நன்மைக்கே என்று சொலவடையின் இன்னொரு வடிவம் இது என்றுகூடச் சொல்லலாம். நிகழும் எல்லாவற்றையும் நன்மை என்று கருதிவிட முடியாது. ஆனால், அதை நன்மை என்று எண்ணுவதன் மூலமாகப் பாதிப்புகள் நமது நரம்புகளில் விடாப்பிடியாகப் பயணிப்பதைத் தவிர்க்க முடியும் என்பது மருத்துவ உண்மை.

நகைச்சுவை என்பது எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தாது. உதாரணமாக, கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவைக் காட்சிகளை லாரல் – ஹார்டியோடு ஒப்பிட்டால் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பர். பின்னதை ரசித்துவிட்டு, முன்னதை ஒதுக்கித் தள்ளுவர். ஒருத்தரை இன்னொருத்தர் அடிப்பதும் பல்பு வாங்குவதும் நகைச்சுவையா என்று கேள்வி கேட்பர். இன்று தமிழ்த் திரையுலகில் சந்தானம், சூரி, சதீஷ், யோகி பாபு உட்படப் பலர் இந்த ஸ்டைலைத்தான் வெவ்வேறு வகையில் பின்பற்றிவருகின்றனர் என்பது வேறு விஷயம்.

பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘பொண்ணு வீட்டுக்காரன்’ படத்தில் டைட்டானிக் நாயகன் லியோனர்டோ டிகாப்ரியோ ஹேர்ஸ்டைலில் வருவார் கவுண்டமணி. அவர் தலையில் ஏதோ ஒரு பொருள் இடித்துவிட, ‘நத்திங் பட் விண்ட்’ என்பார். அதைக் கேட்டதும், அவருக்கு ஜோடியாக நடித்த விசித்ரா மோகப் புன்னகையை வீசுவார். எனது நண்பர் ஒருவர், இந்த காட்சியில் கவுண்டமணி தலையைத் தடவத் தொடங்கியவுடனேயே சிரிக்கத் தொடங்கிவிடுவார். எத்தனை முறை பார்த்தாலும் இதே கதைதான். ஒவ்வொரு முறையும் நான் அவரை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.

நத்திங் பட் விண்ட் என்பது இளையராஜா இசையமைத்த ஒரு தனி ஆல்பத்தின் பெயர். அதற்கும் கவுண்டமணி சொல்லும் பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆராய்ச்சி செய்யக் கூடாது. பெரிதாக அடிபடவில்லை என்பதைத் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஒருவர் சொல்ல முயல்வது அந்த இடத்தில் நகைச்சுவையாக மாறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால், கடம்பூர் அரியநாயகிபுரத்தில் இருக்கும் எனது மாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பழைய காலத்து வீடு என்பதால், ஒவ்வோர் அறையிலும் நுழையும்போது தலையைக் கவனமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நிலைப்படிகள் நாலரை அடி உயரம் கூட இருக்காது. குள்ளமான உருவத்தில் இருந்து வேகவேகமாக நான் வளரத் தொடங்கியிருந்த நேரம் அது. ஒருநாள் ஏதோ ஒரு பொருளை எடுக்குமாறு கண்ணன் மாமா சொல்ல, அவசரமாக அதை எடுத்து வந்தவன் நிலைப்படியை நேராகக் கடந்துவிட்டேன். அவ்வளவுதான். தலையின் நடுப்பகுதியில் யாரோ ஓங்கி அடித்தது போன்ற வலி. விண்விண்ணென்று தெறிக்க, சில நொடிகளில் கண்கள் சிவக்க, உயிர் போகும் அவஸ்தை.

தலையில் அழுத்தித் தடவிவிட்டார் மாமா. அருகில் எனது சகோதரர் சிரித்தபடியே, ‘குனிஞ்சு வரணும்ல’ என்றார். அந்த வலியிலும் என்னை அறியாமல், ‘நான் கொஞ்சம் ஸ்ட்ரெயிட் பார்வர்ட்’ என்றேன். அதைக் கேட்டதும் மாமா வெடித்துச் சிரித்துவிட்டார். ‘தலையில இடிச்சிருக்கு, ஜோக் அடிச்சிட்டு இருக்கியா கோட்டிக்காரா’ என்றார். அப்போது, அந்த கவுண்டமணி காமெடி தானாக நினைவுக்கு வந்தது.

நசித்து அழுத்தும் எத்தனையோ வாழ்வனுபவங்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் நகைச்சுவையாகக் கருத முடியுமா என்ற கேள்விக்குப் பதிலே கிடையாது. யோசித்துப் பார்த்தால், வாழ்வின் பாதையில் நம்மையும் அறியாமல் நகைச்சுவையைத் துணைக்கழைத்துக்கொண்டு செல்வதால் மட்டுமே சோகங்களின் சுமை குறைவாகத் தோன்றுகிறது. அவலங்களைச் சுட்டிக்காட்டுவதைவிட, அதனை நகைச்சுவையாக்குவதே அதை உணர்த்துவதற்கான சிறந்த வழி. சார்லி சாப்ளின் காட்டிய இந்த வழியை முயன்றவரை பயன்படுத்தலாம்!

**- பா.உதய்**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share