மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று(மார்ச் 13) தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தனிநபர் , ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம், ரூ.10 லட்சத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் சுரண்டை வாகன சோதனை சாவடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆலங்குளம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் வந்த மாடசாமி என்பவரிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.95 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில், கேரளாவிலிருந்து ஈரோடு சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதுபோன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் கும்பகோணத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற காரை நிறுத்திச் சோதனையிட்ட போது, 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியை அடுத்த முகந்தனூரில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் உத்திரபாதி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தைத் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி முருகதாஸிடம் ஒப்படைத்தனர் அதிகாரிகள்.�,