இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 2022ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவிலிருந்து 38.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதியாகின்றன. ஆனால் அமெரிக்கா – சீனா இடையில் நிலவும் வர்த்தகப் போரால் ஆசிய பசிபிக் வர்த்தக நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், தென் கொரியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வர்த்தகப் போரால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்கள் முதல் கடல்சார் பொருட்கள் வரையிலான 171 பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. சுமார் 8.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் கூடுதலாக ஏற்றுமதியாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும், வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து *கனெக்ட் 2 இந்தியா* நிறுவனர் பவன் குப்தா நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் *ஃபினான்சியல் கிரானிக்கல்* ஊடகத்திடம் பேசுகையில், “அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோயாபீனுக்கு 25 விழுக்காடு கூடுதல் வரியை சீனா விதித்துள்ளது. அதே சமயத்தில் ஆசிய பசிபிக் வர்த்தக நாடுகளில் இறக்குமதி செய்வதற்கான வரிகளை நீக்கியுள்ளது. சீனாவின் சோயாபீன் உற்பத்தி ஆண்டுக்கு 100 மில்லியன் டன்னாக உள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதேபோல, உலகின் மிகப் பெரிய அரிசி இறக்குமதியாளராகவும் சீனா உள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அளவில் சீனா அரிசி இறக்குமதி செய்கிறது. அண்மையில் இந்திய பாஸ்மதி அல்லாத அரிசி இறக்குமதிக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. 24 ஆலைகள் அரிசி ஏற்றுமதி செய்வதையும் உறுதி செய்துள்ளன. உலகிலேயே மிக அதிக அளவாகக் கடந்த ஆண்டில் 12.7 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் சீனாவுக்கு இந்த ஆண்டில் அரிசி ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன” என்றார்.
அதேபோல, தற்போது இந்தியாவிலிருந்து திராட்சை, ஆரஞ்சு, சோளம், கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதியும் சீனாவுக்கு அதிகரித்துள்ளது. பவன் குப்தா மேலும் கூறுகையில், “வர்த்தகப் போர் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் சிறு, குறு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். இதன்மூலம் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு தற்போதுள்ள 38.74 பில்லியன் டாலரிலிருந்து 100 பில்லியன் டாலராக 2022ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும்” என்றார்.�,