�
கோவையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 400 ஆசிரியர்களுக்குப் பிப்ரவரி மாத சம்பளம் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மாத இறுதி தேதியிலும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பேரூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், வால்பாறை, ஆனைமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்களுக்குப் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாங்கள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாகத்தான் தமிழக அரசு தங்களது பிப்ரவரி மாதத்துக்கான சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, கோவை மாவட்டக் கல்வித் துறை வட்டாரத்தை அணுகினோம். “ஆனைமலை, தொண்டாமுத்தூர், வால்பாறை வட்டாரப் பகுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றிவரும் 400க்கும் அதிகமான ஆசிரியர்கள், தங்களின் ஓராண்டுக்கான வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக அவர்களுக்குக் கடிதம் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் அறிவிப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகும், செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யாத ஆசிரியர்களுக்குத் தான் சம்பளம் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது” என்று அம்மாவட்டக் கல்வி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,