பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்தில் வருவாய்க்குப் பொருந்தாமல் அதிகளவில் டெபாசிட் செய்த 80,000 பேரின் சொத்து மற்றும் வருவாய் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக வரித் துறை கூறியுள்ளது.
இதுகுறித்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்த்ரா நவம்பர் 14ஆம் தேதி *ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்* ஊடகத்திடம் பேசுகையில், “பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்தில் 23 லட்சம் பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் அதிகளவில் ரூபாய் தாள்களை டெபாசிட் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சிலரிடம் வருமான வரித் தாக்கல் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது.
கிட்டத்தட்ட 3 லட்சம் தனிநபர்கள் வருமான வரித் தாக்கல் செய்யத் தவறியுள்ளனர். வருமான வரித் துறை அவர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்புகளை அளித்த பிறகு 2.15 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 80,000 பேர் வருமான வரித் தாக்கல் செய்யாமல் உள்ளனர். அவர்களது சொத்துகள் குறித்த விவரங்களை வருமான வரித் துறை சேகரித்து வருகிறது. அதேநேரத்தில் இந்த ஆண்டு வரி வசூல் இலக்கான 11.5 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டோம்” என்றார்.�,