vவனமெல்லாம் செண்பகப்பூ- 18 விரியும் விழி மலர்!

Published On:

| By Balaji

ஆத்மார்த்தி

சில பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அது மனம் மயக்கும். இதென்ன புதுமை எனக் கேட்பவர்களுக்கு வழக்கமான பொருளில் மயக்குவது அல்ல. ஒரு பாடலைக் கேட்கும் போது ஒருவர் பாடியிருப்பார். அதை இன்னொருவர் குரல் என்று மயக்கத்தில் உணர்ந்து அதையே நம்பத் தலைப்படுவோம். இது எல்லா நிலத்திலும் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து கொண்டே இருப்பது. இசை மீதான மனிதன் ரசனை அலாதியானது மட்டுமல்ல தனித்துவமானதும் கூட. மேற்சொல்கிற மயக்கம் கூட ரசனைக்கும் மேதைமைக்கும் இடையிலான உப சாலைகளில் நிகழக் கூடிய இயல்பான இடவல மாற்ற விளைதல்கள் தான்.

’நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு’ பாடல் ‘அவன் தான் மனிதன்’ படத்துக்காக மெல்லிசை மன்னர் இசைத்தது. அதை வெகுகாலம் இளையராஜாவின் பாடல் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அதே போலத் தான், ’பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் இடம்பெறுகிற, ‘உன்னை நான் பார்த்தது’ பாடலை வி.குமார் இசைத்தது என்றே நம்பினேன். இன்னமும் தானாகப் பாடல்களைப் பதிந்து சீடி பேழைகளைத் தயாரித்து விற்பவர்களின் கைங்கர்யத்தின் விளைவாக சோலையம்மா என்ற படத்தில் இடம்பெறுகிற ’தூதுவளை இலை அரைச்சு’ பாடலானது இளையராஜா ஹிட்ஸ் என்ற தொகுப்புக்களில் மானாவாரியாக இணைக்கப்பட்டு வருகிறது

இது இசை அமைப்பாளரை அல்லது பாடகரை மாத்திரம் மையப்படுத்தி அல்ல பாடலாசிரியரை மையங்கொண்டும் நிகழும். இது வெறும் தோற்றப்பிழை அல்ல.அப்படி பிறழ்ந்து நம்புவதை ஏதோ நானொருவன் மட்டும் செய்தால் தனி மனித அளவில் நிகழ்ந்திருக்கும் சிறுகுற்றம் என்று கொள்ளலாம்.அதைத் தாண்டி பெருங்கூட்டமே பல பாடல்களின் பின்னே மறைந்திருக்கக் கூடிய முகங்களை மாற்றி யோசிப்பதைப் பல காலமாய் செய்வதற்குப் பின்னால் இருக்கக் கூடிய உளவியல் தான் இந்தக் கட்டுரைக்கான பேசுபொருளை உறுதி செய்து தருகிறது.

ஏன் இப்படி நிகழ்கிறது

நாம் தொடர்ந்து கலையின் பின்னால் மறைந்திருக்கக் கூடிய படைப்பு மனம் ஒன்றைத் தொடர்ந்தோடுகிற புரவியாக இருப்பதில் காட்டுகிற ஆர்வம் அதனை அலசுவதிலும் ஆராய்வதிலும் எழுத்தாளனின் துப்பறியும் கதையின் கடைசி பக்கத்தைப் புரட்டாமலேயே முடிவை அப்படியே சொல்லத் தலைப்படுகிற வாசகனுடைய அதே தீவிரமனம் தான் இங்கே ரசிகனுடைய ஆர்வமனமாகவும் திகழ்கிறது. இது சரியல்ல எனினும் தவறல்ல அப்படி நினைத்துத் தொடர்வதன் பின்னே இருக்கக் கூடிய மயக்கம் தான் இசையினால் ஏற்படக் கூடிய மகரந்த மாற்றம்.

**ரவீந்திரன் மாஸ்டர்**

ரவீந்திரன் மாஸ்டர் தன் பெற்றோருக்கு 7 ஆவது குழந்தையாக 9.11.1943 அன்று கொல்லத்தில் பிறந்தார். பாரம்பரிய இசை மற்றும் புத்திசை இரண்டிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவரான ரவீந்திரன் பொன்னுதரணி ரிதுகீதங்கள், வசந்த கீதங்கள் உள்பட ஆல்பங்கள், மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் ஆகியவற்றுக்கு இசை அமைத்தார். வெற்றிகரமான இசை அமைப்பாளராக 25 ஆண்டுகாலம் விளங்கிய இவர், 2005 ஆம் ஆண்டு நோய்மை காரணமாக இயற்கை எய்தினார். இவரது பாடல்களின் இசைக் கட்டுமானம் மற்றும் கர்நாடக ஹிந்துஸ்தானி ராகங்கள் அடிப்படையாகக் கொண்ட இவரது உருவாக்க விதம் ஆகியன மெச்சத்தக்கவை. பரதம் படத்திற்காக சிறப்பு தேசிய விருதை மொழியப்பட்ட ரவீந்திரன் மாஸ்டர் மாநில விருதுகள் ஃபில்ம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்றவர்.

தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி ராகம் ஸ்ரீ ராகம்

[பாடி அழைத்தேன் உன்னை ஏனோ தேடும் நெஞ்சம்](https://www.youtube.com/watch?v=opwI5Oo-_ds) ஏழு ஸ்வரங்களும் சிரியோ சிரி படத்திற்காக ரவீந்திரன் மாஸ்டர் இசைத்தது தமிழில் இது தான் [ஏழிசை கீதமே](https://www.youtube.com/watch?v=orW1uRTZsD0)

மேற்காணும் இரண்டு பாடல்களுமே மலையாளத்தில் கேட்கும் போது சற்றே ஃப்யூஷன் கலந்தொலிக்கும் அவைகளே தமிழில் மறுவுரு கொள்ளும் போது முற்றிலுமான பாரம்பரியக் கட்டுமானங்கள் விலகிடாமல் அளவீடுகளுக்குள் பொருந்தி ஒலித்தன.அதிகதிகம் இசைத்தவரில்லை ரவீந்திரன் மாஸ்டர் ஆனால் தன் எந்தப் பாடலிலும் மெட்டுக் கட்டுவதற்கான ஒழுங்கு புத்தம் புதிய இசைக்கோர்வைகளைத் தேடுகிற திசைதேடும் நிரவல்கள் ராகப் பிடிமானம் இத்தனைக்கும் மேலாக தன் பாடலெனும் தனித்துவமும் குன்றாதொளிர்ந்த மேதமை அவருடையது.

ஹேமாவின் காதலர்கள் படப் பாடல்

டீவீ சந்திரன் இயக்கத்தில் 1985 ஆமாண்டு வெளியான ஹேமாவின் காதலர்கள் பட இசைப்பேழையிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே கேட்கக் கிடைத்தது. அந்த ஒன்று போதுமான பேரிசையாக மனம் வென்று மாயம் செய்தது என்றால் தகும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாடல் கேட்பவரை உருக்காமல் விடாது.இதை இசைத்தவர் ரவீந்திரன் மாஸ்டர் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுதியவர் கவின் முகில்

[https://www.youtube.com/watch?v=75ld2cWrFnk](https://www.youtube.com/watch?v=75ld2cWrFnk)

பல்லவிக்கான இசை தாலாட்டு பாணியிலான வானேகும் விதம் அபரிமிதமான புத்துணர்வை நல்குகிறது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பாக இசைத்து உருவாக்கப்பட்ட பாடலொன்றைப் பாடினாற் போலவே தெரியாது. நேற்று மாலை பதிவு முடிந்தாற் போல் காலத்தை ஒரு ஓரமாக நிறுத்தி வைப்பது இந்தப் பாடலின் பலம். முதல் இடையிசை வீணை இசையாக பெருக்கமெடுக்கிறது வேறேந்தப் பாடலை விடவும் மிகுந்த துல்லியமாக மனம் கவர்கிறது. தன் ஒப்பிடற்கரிய குரலால் இந்தப் பாடலில் பல இடங்களில் தன் கையெழுத்தை இட்டாற் பொல் சொந்தங்கொண்டாடிப் பாடியிருப்பார் பாலு. அதிலும் சரணத்துக்கு முந்தைய ஆலாபனை ஒன்று வரும். அதை பாலு பாடியதன் முன்னே சர்க்கரைப் பாகும் தோற்றோடும். அத்தனை இனித்துப் பாடமுடியுமா என்று ஆச்சர்யத்தின் உச்சத்துக்கு அனுப்பி வைக்கிறார் பாலு

பார்வை தேரில் போகும் பாவை

வானோடு தான் சேர்ந்து மேகத்தில் நீராடும்

பால் நிலவாய் வாராளோ

பாயும் ஒளி தாராளோ

மீனும் நீரும் காணும் காதல்

தானும் காட்டும் நாளே வேண்டும்

(பார்வை..)

(வேறெந்தப் பாடலிலும் இல்லாத சொல்லாடலாக வாராளோ தாராளோ என்பது வசீகரிக்கிறது தானே? )

வழியும் நாணத்தை எழிலும் தாலாட்டும்

தேனாய் பேசும் போது (இந்த ஒரு வரியை லேசாய் நீட்டித்திருப்பது ரசம்)

பெண்மை காணாதோ பெருமை தான் காணும்

வாழ்த்த வார்த்தை ஏது (இதையும் நீட்டியது அற்புதம்)

விரியும் விரியும் விழி மலர் புரியும் புரியும்

புன்னகை அள்ளும் அள்ளும்

நினைவினில் மனமும் செல்லும் என்றென்றும்

(பார்வை..)

கடலலை கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்தாற் போலப் பெருகும் இசை மேற்கத்திய கோர்வைக்கு மாறித் திரும்புவது பேரழகு. இறுதியில் வீணையிசையும் மணியொலியுமாய்த் திருப்புவது அபாரம்

வசந்த பூங்காற்றை இருக்கும் நாளெல்லாம்

வாழ்ந்து பூங்கா தேடும்

நினைக்கும் காலத்தை இணைக்கும் நாளோடு

ஆசை மோத ஓடும்

துணிவு துணிவு மனம் தர

கனவு கனவு வழி தர

நினைவு நினைவு நிலைத்திட

இன்பம் இன்பம்

(பார்வை..)

தமிழில் நிறையப் படங்களுக்கு இசைக்கவில்லை என்றாலும் தான் வேறு நிலத்திலிருந்து வந்து இசைத்தவரென்பதைத் துளியும் காட்டிக்கொள்ளாத ரவீந்திரன் மாஸ்டரின் இயல்பான இசைக்குழைதல் அவரது இசையை காலம் கடந்து ரசிக்க வைக்கிறது.

சிவாஜி ரேவதி நடித்த தமிழ்ப் படமான லட்சுமி வந்தாச்சு படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய சந்தன நிலவொளி வந்தனம் எனும்வழி என்று ஆரம்பிக்கிற பாடல் கர்நாடக இசையும் புத்திசைமெட்டும் கலந்த சிறப்பான பாடல். இதனை எழுதியவர் புலவர் சிதம்பரநாதனாக இருக்கக் கூடும் உறுதியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. கண்மணியே பேசு என்ற படத்தில் நலம் பாடுவேன் நீ வாழத் தான் என்ற பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜானகி பாடியது. இதே படத்தில் சூப்பர்ஹிட் பாடலான வானம் எங்கள் எல்லை ஊரென்ன பேரென்ன ராஜா வீட்டுப்பிள்ளை பாடல் மலேசியா வாசுதேவன் முன்பில்லா புதிய தொனி பற்றிப் பாடியது.

சந்தன நிலவொளி பாடலாகட்டும் வானம் எந்தன் எல்லை பாடலாகட்டும் அல்லது ரசிகன் ஒரு ரசிகை பாடல்களாகட்டும் எல்லாமே இளையராஜாவின் இசை என்று தான் சிறுபிராயத்தில் எண்ணினேன். அவரது ஆளுமை அறிய நேர்கையில் அத்தனை பாடல்களையும் தாண்டிய வியப்பு மலையாளத்தில் வெரைட்டி மாமன்னராகவே ரவீந்திரன் மாஸ்டர் விளங்கினார் எனப் புரிந்தது. மாஸ்டர் மலையாள தேசத்து மல்லிகை. இங்கும் மணம் கமழும் இசை தந்தவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

ரவீந்திரன் மாஸ்டர் அபூர்வமான இசையமைப்பாளர் மட்டுமல்ல. மக்களின் ரசனைக்கு உகந்த நல்லிசையைத் தீர்மானித்துத் தருவதன் பொறுப்பை வழுவாமல் இசைத்துத் தந்த வெகு சிலரில் ஒருவர். அவரது பாடல்கள் காலம் கடந்து ஒலிக்கின்றன. என்றும் தீராநதியலைகளாய்ப் பெருக்கெடுத்தோடுகின்றன. வாழ்க இசை

(தொடரும்)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share