நீரவ் மோடி லண்டன் தெருக்களில் சாதாரணமாக வலம் வரும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் இந்திய அரசு அதுகுறித்து பதிலளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரியான நீரவ் மோடி லண்டனில் தங்கியிருப்பதை டெலகிராப் ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் சாதாரணமாக சாலையில் நடந்து வரும்போது டெலகிராப் ஊடகத்தின் செய்தியாளர் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் எந்தக் கேள்விக்கும் நீரவ் மோடி பதில் சொல்லாமல் அங்கிருந்து கார் ஒன்றில் ஏறிச் செல்கிறார். இந்தக் காணொலியை டெலகிராப் ஊடகம் இன்று (மார்ச் 9) வெளியிட்டுள்ளது.
மேற்கு லண்டனின் சோஹொவில் உள்ள அபார்ட்மெண்டில் நீரவ் மோடி தங்கியிருப்பதாகவும், அங்கிருந்து வைர நிறுவனத்துக்கு சென்று வருவதாகவும் டெலகிராப் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 3 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் இவர் தங்கியிருப்பதாகவும், இந்த வீட்டின் மதிப்பு ரூ.75 கோடி இருக்குமெனவும், மாத வாடகை 17,000 பவுண்டுகள் (ஏறத்தாழ ரூ.15,50,000) இருக்கும் எனவும் டெலகிராப் கூறியுள்ளது. நீரவ் மோடியின் இருப்பிடம் உறுதியாகத் தெரிந்துள்ளதால் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென்று காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீரவ் மோடியை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான இங்கிலாந்தின் பதிலுக்காகக் காத்திருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ [ட்விட்டர் பக்கத்தில்](https://twitter.com/dir_ed/status/1104300767236612096), ‘நீரவ் மோடியை இந்தியாவுக்கு கடத்தி வருவதற்கு இங்கிலாந்து நாட்டிடம் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்தியாவின் வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளதை இங்கிலாந்து மத்திய ஆணைய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், ’நீரவ் மோடி லண்டனில் இருப்பதை இந்திய அரசு அறிந்துள்ளது. நீரவ் மோடி இங்கிலாந்தில் சாதாரணமாக தெருக்களில் நடந்து செல்கிறார் என்று செய்தி கிடைத்தால் உடனடியாக அவர் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவார் என்று அர்த்தமல்ல. அதற்கு முறையான செயல்முறை உள்ளது. இங்கிலாந்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.�,