பிரதமர் மோடியைக் காப்பாற்ற டசால்ட் நிறுவனம் பொய் கூறுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மோடி தலைமையிலான அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கான விலை முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்த விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும், பொதுப்பணித் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தைத் தராமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரஃபேல் போர் விமான விலை விவரங்களைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி விவாதப் பொருளாகிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் இன்று (நவம்பர் 2) செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ”ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி நிறுவனத்திற்கு டசால்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாகவும், பிரதமர் மோடியைக் காப்பாற்ற டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொய் சொல்வதாகவும் கூறியுள்ளார். ரஃபேல் முறைகேடு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டால் மோடியால் அவற்றை எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
ஊழல் செய்தது ஒன்று, மற்றொன்று இவ்விவகாரத்தில் முடிவெடுத்தவர் பிரதமர் மோடி என்பது தெளிவாக தெரியும். இந்த ஒப்பந்தத்தால் அனில் அம்பானிக்கு ரூ.30000 கோடி கொடுப்பதற்கு மோடியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்காதது குறித்து விளக்கம் அளித்த டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி ஹிந்துஸ்தானிடம் போதிய நிலம் இல்லை. ஆனால் ரிலையன்சிடம் நிலம் இருக்கிறது என விளக்கமளித்தார்.
ஆனால் நஷ்டத்தில் (அதாவது 8.30 லட்சம் மதிப்புடன்) இயங்கிக்கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 284 கோடி ரூபாய் டசால்ட் நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை வைத்துத்தான் அம்பானி நிலம் வாங்கியுள்ளார். ஆக மோடியைக் காப்பாற்ற டசால்ட் நிறுவனம் பொய் சொல்வதும், முதலீட்டின் அடிப்படையில் அம்பானி லஞ்சம் பெற்றதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.�,