v’மூழ்கும்’ அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்!

public

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 11) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

’’அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம் தான் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இந்த கோட்டத்திற்கு சொந்தமான பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக ரூ.1549.60 கோடிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்கள் ரூ.580.63 கோடிக்கும், மதுரைக் கோட்டத்தின் சொத்துக்கள் ரூ.363 கோடிக்கும் அடகு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள 5 அரசுப் போக்குவரத்துக்கழகக் கோட்டங்களின் பேருந்துகள், பணிமனைகள், நிலங்கள், தளவாடங்கள் ஆகியவையும் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவற்றின் விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்படி வழங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதித்து வருகின்றனர்.

அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் அடகு வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.11,000 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செலுத்தப்படாமல் இருக்கும் தொகை, 6 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.6400 கோடி என்று கூறப்படுகிறது. இவை தவிர வேறு வழிகளில் பெறப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்தால் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த கடன் சுமையை ரூ.20,000 கோடியைத் தாண்டும்’’ என்று கணக்குப் போட்டுச் சொல்லியிருக்கிறார் அன்புமணி.

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. அடுத்த இரு ஆண்டுகளில் அவற்றின் சொத்துக்களை அடகு வைக்கும் அவலம் தொடங்கி விட்டது. தொடக்கத்தில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குதல் உள்ளிட்ட செலவுக்காக பேருந்துகளை அடகு வைப்பதும், அடுத்த சில மாதங்களில் அவை மீட்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

2006ம் ஆண்டுக்கு பிறகு தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளுக்காக அவற்றின் பணிமனைகள் அமைந்துள்ள நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் அடமானம் செய்யப்பட்ட சொத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் மீட்கப்பட்டதே இல்லை. மாறாக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துவிட்டதாகக் கணக்குக் காட்டி, கூடுதல் கடன் பெறுவது தான் வழக்கமாகி வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் அந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது.

மேற்கண்ட தகவல்களை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கும் அன்புமணி…

’’மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அடகு வைக்கப்பட்ட இந்த போக்குவரத்துக் கழக சொத்துகளை மீட்காவிட்டால் அந்த சொத்துகள் அனைத்தும் மூழ்கும்! போக்குவரத்துக் கழகங்களையும் மூடவேண்டிய நிலைக்குப் போய்விடும்!�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *