கோவை மாணவி லோகேஸ்வரி மரணத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் இதுபோன்று இனி நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துவந்தார். கடந்த ஜூலை 12ஆம் தேதி இக்கல்லூரியில் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது, பயிற்சியாளர் தள்ளிவிட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக, பயிற்சியாளர் ஆறுமுகத்தை விசாரித்து வந்த ஆலாந்துறை காவல் துறையினர் நேற்று (ஜூலை 13) காலை அவரைக் கைது செய்தனர்.
இந்திய மாணவர் சங்க கோவை மாவட்டத் தலைவர் எம்.தினேஷ்ராஜா இதற்குக் கண்டனம் தெரிவித்து, மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுக் கல்லூரி முதல்வருக்கு பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவியின் மரணத்துக்குக் காரணமான சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
**மு.க.ஸ்டாலின்**
மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உடன் பயிலும் மாணவர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர் பயிற்சியை மாணவ மாணவியர்க்குக் கற்றுக் கொடுக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ, அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். .
குறிப்பாக இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும்போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்துகொண்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரிடர் பயிற்சி என்று வரும்போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதைக் கல்வித் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும், அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதுமே இதுபோன்ற உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே, இதுபோன்ற பேரிடர் பயிற்சிகள் போதிய பாதுகாப்புகளுடன் நடைபெறவும், பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல் துறையின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
**வைகோ**
லோகேஸ்வரி இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எந்த விதப் பயிற்சியும் பெறாத ஒரு பத்துப் பேர் கீழே ஒரு வலையைப் பிடித்துக்கொண்டு, இரண்டாவது மாடியிலிருந்து மாணவியைக் குதிக்கச் செய்துள்ளனர். தக்க பாதுகாப்பு எதுவும் இல்லாமல், வேடிக்கை விளையாட்டாக நடத்தியிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் இதுபோன்ற பயிற்சிகள், தகுந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றனவா, அதற்கு அரசு ஒப்புதல் இருக்கின்றதா, தக்க கண்காணிப்புகள் இருக்கின்றனவா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
சுற்றிலும் நின்றுகொண்டு மாணவி குதிப்பதைப் படம்பிடித்திருக்கிறார்கள். அது சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. இதனால், பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் அலைபேசி பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும். இல்லையேல் இதுபோல இன்னும் பல விபரீதங்கள் நேர்வதற்கு வாய்ப்புண்டு, எனவே, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் பேரிடர் பயிற்சியில் போலிப் பயிற்சியாளர்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.�,