இந்தியாவின் எருமை மாட்டிறைச்சியின் மீதுள்ள தடைகளை விலக்கி, ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
மாட்டிறைச்சி விற்பனை பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. முக்கியமாக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. ஆனால் ‘பாதம் மற்றும் வாய் நோய் வைரஸ்’ இந்தியாவில் சில இடங்களில் இருப்பதால், இந்திய எருமை இறைச்சியைச் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தடைசெய்துள்ளன. இந்த வைரஸ் இல்லாத பகுதிகள் அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகள் பற்றிய அறிவியல்பூர்வமான அறிக்கையைச் சர்வதேசத் தரநிலை அமைப்பான ஓ.ஐ.ஈ-க்குக் கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அனுப்பிவைத்துள்ளது.
இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் பேசுகையில், “அரசு அனுப்பியுள்ள அறிக்கையை ஓ.ஐ.இ. அமைப்பு அங்கீகரித்தவுடன், சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு எருமை மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய முடியும். தற்போது சில வைரஸ் தொற்று இருப்பதால் இந்நாடுகளில் இந்தியாவின் எருமை மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஓ.ஐ.இ. அமைப்பின் சான்றிதழைப் பெற்றுவிட்டால், இறக்குமதியாளரின் மனதில் சந்தேகங்கள் இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனாவின் தர நிலை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எருமை மாட்டிறைச்சியின் மீதுள்ள தடையை விலக்கிக்கொள்ளச் சீனா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,