புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 200 விழுக்காடு இறக்குமதி வரி விதித்துள்ளது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்தி போராவில் பிப்ரவரி 14ஆம் தேதி சிஆர்பிஎஃப் படைவீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ அகமது என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது என்ற நபர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இந்தச் சம்பவத்தால் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் படைவீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாக இச்சம்பவம் அறியப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கலாம் என்று இந்திய அரசு சந்தேகித்து வருகிறது.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே நெருங்கிய ஆதரவு நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை இந்தியா நீக்கியது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா கூறி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (பிப்ரவரி 16) தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து பழங்கள், ஜிப்சம், சல்பர், தயார் செய்யப்பட்ட தோல் பொருட்கள், தாதுக்கள், கனிம எண்ணெய்கள் மற்றும் சிமென்ட் போன்றவையே அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.�,