புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாலிவுட் துறையினர் பாகிஸ்தானியர்களுடன் இணைந்து பணிபுரியக் கூடாது என்று சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கண்டனம் எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். சினிமா பிரபலங்களும் கூட ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஷபானா அஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர்கள் அவர்களது உயிரை தியாகம் செய்துவரும் நிலையில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றங்களை தொடர முடியாது. வீரர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் மதூர் பண்டார்கர் பேசுகையில், “புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வீரர்களை சவப்பெட்டியில் தேசியக் கொடியுடன் பார்ப்பது வேதனையளிக்கிறது. பாகிஸ்தானுடனான அனைத்துக் கலாச்சார உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இந்த வீரர்களால்தான் நாம் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தோம். எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சினிமா துறையினர் பாகிஸ்தானியர்களுடன் இணைந்து பணிபுரிவதைத் தவிர்க்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்திய ராணுவத்துடன் நான் துணை நிற்கிறேன். எனது துறையினரும் அவ்வாறே செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,