ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பை மே மாதம் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பணி காரணமாக மே மாதம் படப்பிடிப்பை நடத்தலாம் என இயக்குநர் ஷங்கரிடம் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது. எனவே தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதால் படப்பிடிப்பை கமல் ஒத்திவைத்துள்ளார்.
டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே ரஜினி நடித்த பேட்ட படத்துக்கு இசையமைத்திருந்த அனிருத் முதன்முறையாக கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.�,