நேரு காலத்தில் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவின் 70ஆவது ஆண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று ஜூலை 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார்.
அப்போது குடியரசுத் தலைவர், நாட்டில் ஆங்காங்கே பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்பாக மறைமுகமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
‘நேஷனல் ஹெரால்டு’ விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப், “சட்டத்தைக் கையிலெடுக்கும் கும்பல்களின் ஆதிக்கம் அளவுக்கு மீறி செல்லும்போது அறிவுசார் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு அதுபோன்ற கும்பல்களின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.
இந்தியச் சமுதாயத்தின் அடிப்படை கோட்பாடுகளைக் காத்திட நாம் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுகிறோமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஊடகங்களால்தான் ஜனநாயகம் இன்னும் உயிரோடு இருக்கிறது’’ என்றார்.
இந்த விழா நடந்த அதே நாளில்… ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில் சோனியா காந்திக்கும், ராகுலுக்கும் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது டெல்லி பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை நடத்திவரும் அசோசியேட் ஜெனரல் நிர்வாகத்துக்கு ராகுல் காந்தி தலைமையிலான யங் இந்தியா அறக்கட்டளை மூலமாக 50 லட்சம் ரூபாய் கடனாக அளித்துவிட்டு அதற்குப் பதிலாக 90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சோனியா, ராகுல் ஆகியோர் அபகரித்ததாக 2014ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை சோனியா, ராகுல் தனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு சுவாமி இன்னொரு மனு செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சுவாமி தாக்கல் செய்த மனுவின் நகல் தங்களுக்கு அளிக்கப்படவில்லை’ என்று சோனியா, ராகுல் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மனுவின் நகலை அவர்களுக்கு அளிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமியை அறிவுறுத்திய நீதிமன்றம், அந்த மனுவுக்கு வரும் 22ஆம் தேதிக்குள் பதில் தருமாறு சோனியா, ராகுல் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
நேற்று ஜூலை ஒரே நாளில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக இரு வேறு நகர்வுகள் டெல்லியில் நடந்திருக்கின்றன.�,