V
நெல் மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 80 ரூபாயும், பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 400 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
மழையில் பாதிக்கப்பட்ட காரிஃப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு 4 முதல் 10 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளது. அதாவது, 2017-18 ஜூலை – ஜூன் காரிஃப் பருவத்துக்கான பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய வேளாண் அமைச்சகம் உயர்த்தியுள்ளது. விதைப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இந்த ஆண்டு பருவமழையும் வழக்கமான அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே தற்போது குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.80 உயர்த்தப்பட்டு 1,550 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 5,450 ரூபாயாகவும், பாசிப் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 5,575 ரூபாயாகவும், உளுத்தம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை 5,400 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 4,020 ரூபாயாகவும், சோயாவின் குறைந்தபட்ச ஆதார விலை 3,050 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.�,