பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாஜக எம்பி சத்ருகன் சின்கா ஆதரவளித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். நிகழ்வில், பாகிஸ்தான் ராணுவ தளபதி குமர் ஜாவத் பாஜ்வாவை சித்து கட்டிப்பிடித்ததும்,பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் பக்கத்தில் நவ்ஜோத் அமர்ந்திருந்ததும் சர்ச்சையை உருவாக்கியது.
இதற்கு எதிராக நவ்ஜோத் மீது முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தேச துரோக வழக்குத் தொடரப்பட்டது. நவ்ஜோத்தை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர். பஞ்சாபில் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் திரும்பிய நவ்ஜோத்,ராணுவ தளபதி எங்களுக்கு அமைதி வேண்டும் என்று வேண்டினார், அவரே என்னிடம் வந்து, 2019இல் சீக்கிய மத நிறுவனர் குரு நானக்கின் 550வது பிறந்த நாளை முன்னிட்டு கர்தார்பூர் எல்லையை நாம் திறப்போம் என்று கூறும்போது நான் என்ன செய்வது” என்று தெரிவித்திருந்தார்.
நவ்ஜோத்தின் செயலுக்கு பஞ்சாப் முதல்வரே எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், பாஜக எம்பி சத்ருகன் சின்கா ஆதரவளித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று (ஆகஸ்ட் 21 ) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் பயணத்தின் போது அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப்பை கட்டி தழுவினார். தற்போதைய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பயணத்தின் போது நவாஸ் ஷெரிப்பை கட்டி அணைத்துள்ளார்” என்று குறிப்பிட்டார். மேலும், நவ்ஜோத்தும் இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தினை கூறிவிட்டார். அதனால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்து போய் விட்டது என தெரிவித்துள்ளார்.
இதுவரை கட்சிக்கு எதிராக நான் பேசியது இல்லை. கண்ணாடி போல் இருக்க முயற்சிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.�,”