சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தை கைது செய்வதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியுள்ளது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட சாரதா நிதி நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை பணம் வசூலித்துத் திருப்பி கொடுக்கமுடியாமல் சிபிஐ விசாரணையைச் சந்தித்து வருகின்றது. இந்த மோசடி தொடர்பாக இதன் நிறுவனர் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சாரதா குழுமமும், ஜி.என்.என்.பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் இணைந்து பாசிட்டிவ் என்ற ஒரு டிவி சேனலை வாங்குவது தொடர்பாக 2010ல் ஒப்பந்தம் செய்தன.
ரூ.42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்குச் சட்ட உதவிகள் வழங்கியதற்காக, நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.3 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தின.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சாராத நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முன் ஜாமீன் கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (பிப்ரவரி 18), தலைமை நீதிபதி ஜாய்மால் பாக்ஷி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாரதா நிதி நிறுவன வழக்கில் நளினி சிதம்பரம் மீது ஆறு வாரங்களுக்கு கைது நடவடிக்கை எடுக்ககூடாது என்று கூறி, அவருக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார். எனினும் அவரது முன் ஜாமீன் மனுவை நிலுவையில் வைப்பதாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
�,