Vதேர்தல்: கூடுதல் காவலர்கள் தேவை!

Published On:

| By Balaji

மதுரையில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின்போது, சித்திரைத் திருவிழாவும் நடைபெறவிருப்பதால், தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் தேவைப்படுகின்றனர் என தமிழக டிஜிபிக்கு மதுரை ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.

மார்ச் 10ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினத்தில்தான் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், தேர்தலை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றமாதிரி தெரியவில்லை.

தேர்தலையும், திருவிழாவையும் சுமுகமாக நடத்துவதற்கு மதுரை மாவட்டத்துக்கு மட்டும் 12 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு 12 ஆயிரம் காவலர்கள் போதாது என்றும், கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

**வாக்குப்பதிவில் பாதிப்பு இல்லை**

திருவண்ணாமலை மாவட்டத்திலும், ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவும், சித்திரை பெளர்ணமியும் நடைபெறுகிறது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ஏப்ரல் 18ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்திரை பெளர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்குதான் ஆரம்பிக்கிறது. அதனால், அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். வாக்குப்பதிவு மையங்கள் 2 கி.மீட்டரிலிருந்து ஒன்றரை கி.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

2 வாக்கு எண்ணும் மையங்கள் கிரிவலப்பாதையில் உள்ளது. இதனால், ஏதாவது சிரமம் ஏற்படுமா என்று காவல் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பிரச்சினை ஏற்படுமாயின், வாக்கு எண்ணும் மையங்களை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்வோம் என தெரிவித்தார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share