Vதுரியோதனன்களும் சல்லியன்களும்!

Published On:

| By Balaji

தேவிபாரதி

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்ரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. அதுபற்றி வெளியிடப்பட்டிருக்கும் இதிகாசச் சாயல்கொண்ட புகைப்படங்களையும் காணொலிகளையும் பார்த்தால் புல்லரிக்கிறது. 18ஆம் தேதி இரவு முழுவதும் -19ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் வரை – கேதார்நாத்தில் காவி உடை உடுத்துக்கொண்டு தியானத்தில் மூழ்கியிருக்கிறார் பிரதமர்.

வாக்காளர்களை நம்புவதைவிடக் கடவுளை நம்புவது மேல் எனத் தீர்மானித்திருக்கிறார் மோடி. தன்னை ஓர் இதிகாச நாயகனாகக் கற்பனை செய்துகொண்டிருக்கும் மோடி அதன் இறுதிக் கட்டம் பற்றிய கற்பிதங்களை உருவாக்கவும் முயன்றிருக்கிறார். காவிக் கச்சையும் வெண்ணிற உடுப்புமாக மோடி கேதார்நாத்தின் குகையை நோக்கி நடக்கும் அந்தக் காட்சித் துண்டுகளைப் பாருங்கள், குகையில் கண்களை மூடி தியானத்தில் மூழ்கியிருக்கும் அவரது முகத்தைப் பாருங்கள். அவற்றின் வழியே நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தேர்தலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு மோடி ஒரு செய்தியைச் சொல்ல முற்பட்டிருக்கிறார், அதைவிட முக்கியமாக அவர்களை ஜனநாயக அமைப்பு அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சூதாட்டத்திற்கு அழைப்புவிடுத்திருக்கிறார் எனக் கற்பனை செய்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

**பதற்றத்தின் வெளிப்பாடு?**

பிரதமர் ஓய்வை விரும்பியிருக்கிறார் என்றுகூடக் கற்பனை செய்துகொள்ளலாம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கண்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணங்கள் ஏற்படுத்திய சோர்விலிருந்து விடுபடுவதற்கு தியானத்தில் மூழ்குவது உதவும் என இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட ஆன்மிக நாட்டமுடைய மற்ற எல்லோரும் நம்புவது போலவே மோடியும் நம்பியிருக்கலாம். இரண்டு நாள்களுக்கு முன் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் தன் குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வந்திருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டுத் திரும்பியிருக்கிறார். மூவரது ஆன்மிகச் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான நோக்கம் ஒன்றுதான். மூவருமே தங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிய பதற்றத்தில் இருப்பவர்கள், அதைக் கடவுளின் கையில் ஒப்படைக்க விரும்புபவர்கள்,

மூவருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்பது முக்கியமானது. கடந்த எழுபதாண்டுகளில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தல்களிலிருந்து தற்போதைய தேர்தலை வேறுபடுத்திக் காட்டுவது அதன் மத அடையாளம்தான். பிரதமர் மோடியும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் அதை அப்படித்தான் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். குஜராத் கலவரத்திற்குப் பிந்தைய பதினேழு ஆண்டுகளாக இஸ்லாமிய எதிர்ப்பை, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெறுப்பை முன்னிறுத்தி அதை வளர்தெடுப்பதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவைப் பெறவும் தக்கவைத்துக்கொள்ளவும் முயன்று வந்திருக்கும் மோடி – அமித் ஷா கூட்டணிக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன் அவர்களே சொன்னது போல் இது முக்கியமான தேர்தல்.

புல்வாமா தாக்குதலும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் மக்களவைத் தேர்தல் வெற்றிக்குக் கைகொடுக்கும் என நம்பிய பாஜக அதையே தேர்தலின் மையப் பிரச்சினையாகவும் மாற்றியதைக் கண்டு திகைத்துப்போன எதிர்க்கட்சிகள் சுதாரித்துக்கொள்வதற்குள் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி, நடைபெற்று முடிந்துவிட்டன. பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய அளவிலான வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் தவறிவிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமக்கான தேர்தல் உத்திகளை வகுத்துக்கொள்வதில் தோல்வியடைந்திருக்காவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வருவதைப் பற்றிய கற்பனைகளில் மோடியும் அமித் ஷாவும் இவ்வளவு நம்பிக்கையோடு மூழ்கியிருக்க மாட்டார்கள். தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்கு முன்னால் ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளைச் சார்ந்தே எதிர்க்கட்சிகள் தேர்தலைச் சந்தித்திருக்கின்றன. அவற்றைச் சார்ந்தே வியூகங்களையும் வகுத்திருக்கின்றன.

அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொதுவாக விளங்கிய மோடி எதிர்ப்பு என்னும் ஒற்றை முழக்கம் மோடிக்கு எதிரான ஓர் அலையை உருவாக்கத் துணை புரியவில்லை. மோடி அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போயிருப்பது மோடிக்கே சாதகமானதாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகளைப் பற்றிய ஊகங்களால் பதற்றமடைந்திருக்கும் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பற்றிய கற்பனைகளின் கரங்களில் தம் அரசியல் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கின்றன.

கடவுளை நம்புவதும் இதுபோன்ற கற்பனைகளை நம்புவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

**பாண்டவர் குகையில் மோடி**

ஆனால், மோடியின் ஆன்மிகம் அவ்வளவு வெகுளித்தனமானது அல்ல. ஜனநாயகவாதிகள் கற்பனை செய்துகொள்வது போல் முட்டாள்தனமானதுமல்ல. கேதார்நாத் குகையில் காவி உடையுடன் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் மோடி அதன் அரசியல் விளைவுகள் பற்றி எதுவுமே தெரியாதவராக இருப்பார் என நம்புவது பேதைமை. மே 19ஆம் தேதி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்குத் தயாராகிகொண்டிருக்கும் இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு அந்த தியானம் உதவும் என மோடியும் அமித் ஷாவும் கணக்குப் போட்டிருக்கவே மாட்டார்கள் எனச் சொல்ல முடியுமா என்ன?

கடைசிக் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் 59 மக்களவைத் தொகுதிகளில் பல மோடிக்குச் சாதகமானவை அல்ல. சாதகமானதாக மாற்றுவதற்கு மோடி கேதார்நாத்தைத் தேர்ந்தெடுக்கிறார், பாண்டவர்கள் தியானம் செய்ததாகக் கருதப்படும் அந்தக் குகையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு வாரத்திற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்தது போலத்தான் துரியோதனன் அல்ல எனச் சொல்ல விழைகிறார்.

கேதார்நாத்தின் பாண்டவர் குகை பற்றிய கற்பிதத்தைப் பயன்படுத்தி மோடியும் அமித் ஷாவும் எதிர்க்கட்சிகளை தங்களுடைய பத்ம வியூகத்திற்குள் சிக்கவைக்க முயன்றிருக்கிறார்கள். அதிலிருந்து மீள்வதற்கு இப்போது அர்ஜுனனைத் தேடிக்கொண்டிருக்கின்றன அவை. தங்கள் அணியில் உள்ள எண்ணற்ற அர்ஜுனன்களில் யாராவது ஒரு அர்ஜுனனை. ராகுல், மம்தா, மாயாவதி என அர்ஜுனன்களின் எண்ணிக்கை திகைக்க வைக்குமளவுக்கு அதிகமாக இருப்பதுதான் பிரச்சினை. அவர்கள் தவிர சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், தேவகவுடா என வேறு சில மாநிலக் கட்சித் தலைவரும் அர்ஜுனன் அவதாரமெடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். இறுதிக்கட்டத் தேர்தலில் மீதமிருக்கும் மக்களவைத் தொகுதிகளின் இந்து வாக்காளர்களைக் கவர்வதற்கு கேதார்நாத் குகையில் உட்கார்ந்துகொண்டு மோடி காவி நிறச் சோழியை உருட்டிப் பார்த்திருக்கிறார்.

அர்ஜுனன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு எதிர்க்கட்சிகளும் சோழிகளை உருட்டிக்கொண்டிருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த கையோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரதமர் யார் என்பதைத் தீர்மானித்து வைத்துக்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் அதே நோக்கத்தோடு ஒரு கூட்டத்தை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிற அதே மே 23ஆம் தேதியன்று கூட்டுவதற்கு ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் சோனியா காந்தி கிங் மேக்கர்களான ராவுக்கும் நாயுடுவுக்கும் சொல்லியிருக்கும் செய்தி அடுத்த பிரதமர் ராகுல்காந்தியாகவே இருக்க முடியும் என்பதுதான். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து சோனியா தன் நிலையை மாற்றிக்கொள்ளலாம். மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்கு கர்நாடக பார்முலாவைப் பின்பற்றி தேவகவுடா, நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் என கைக்கு அடக்கமான யாராவது ஒருவருக்கு கிரீடம் சூட்டுவதைப் பற்றி யோசிக்கலாம்.

மோடியும் அமித் ஷாவும் இப்போது சல்லியன்களைப் பற்றியும்கூட யோசித்துக்கொண்டிருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் சல்லியன்களை. கடந்த வாரம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன குட்டிக் கதையையும் அதைத் தொடர்ந்து உருவான சர்ச்சைகளையும் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. அர்ஜுனனாக இருப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சல்லியனாக மாறுவதற்கான நியாயங்களைத் தேர்தல் முடிவுகள் உருவாக்கக்கூடும். சல்லியன் பற்றிய சித்திரம் தர்மத்திற்கு எதிரானதல்ல என்பதால் சல்லியனாக இடம்பெறுவது குறித்த பதற்றம் இந்திய அரசியல் களத்தில் அவமானத்துக்குரியதாகவும் கருதப்படுவதில்லை.

சுதந்திரத்துக்குப் பிந்திய இந்திய அரசியல் வரலாறு எண்ணற்ற சல்லியன்களை உருவாக்கியிருக்கிறது. சல்லியன்கள் அரியணை ஏறிய வரலாறும் உண்டு. 1977இல் அவசரநிலைக்குப் பிறகு நடைபெற்ற தர்மயுத்தத்தில் வெற்றிபெற்ற ஜனதா அரசு சல்லியன்களால் கவிழ்க்கப்பட்டது. சல்லியன்கள் பின்னர் தர்மபுத்திரன்களாக மாறி முடிசூட்டிக்கொண்டார்கள். ராஜநாராயண், சரண்சிங், சந்திரசேகர் உள்ளிட்டவர்களை அப்படிச் சொல்லிப் பார்ப்பது இந்திய அரசியல் குறித்த சுவாரஸ்யமான கதையாடல்களை உருவாக்கிக்கொள்வதற்குப் பயன்படும் அல்லவா?

ஆனால், பாரதக் கதையைப் பின்தொடர்ந்து செல்லும் இந்தக் கற்பனைகள் முடிவற்றவை. நீண்டுகொண்டே செல்லக்கூடியவை. தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 23ஆம் தேதி வரை, புதிய அரசு அமையும் வரை அல்லது அதற்குப் பிறகும் கூட நீடிக்கக்கூடியது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share