புனிதம் என்னும் கற்பிதம்
**மதரா**
2011ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ளது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் . விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் உட்பட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
கணவனுக்கு தெரியாமல் தன் முன்னாள் காதலனை தனது வீட்டிற்கே வரவழைத்து சந்திக்கிறாள் வேம்பு (சமந்தா). பள்ளியை கட் அடித்துவிட்டு நண்பனின் வீட்டில் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் ஐந்து மாணவர்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்றவனை வரவேற்க அவன் மனைவி, மகன் உறவினர்களுடன் வாசலில் காத்திருக்கின்றனர்.
இந்த மூன்று சம்பவங்களிலும் நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்கள் உடனடியாக நிகழ்கின்றன. அவை பிரதான கதாபாத்திரங்களை மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்திருப்பவர்களையும் பாதிக்கின்றன. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவிக்க, அதிலிருந்து விடுபட அவர்கள் நடத்தும் போராட்டம், ஒரு சிக்கலிலிருந்து தப்பித்து அதைவிட பெரிய சிக்கலில் மாட்டுவது எனத் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.
கதை மாந்தர்கள் சந்திக்கும் அசாதாரண சூழல் அபத்த நகைச்சுவை பாணியில் விரிவதுடன் போகிற போக்கில் நன்மை, தீமை என்ற வரையறைகளை அழுத்தமாகக் கேள்விக்குட்படுத்துகிறது.
மேலே சொன்ன மூன்று சம்பவங்களின் பின்னணியில் கதை தொடங்கினாலும் அந்தப் பயணத்தில் மேலும் சில கதாபாத்திரங்கள் இணைவதுடன் புதிய கதைகளும் சேர்ந்து பிண்ணிக்கொள்கின்றன.
தற்கொலைக்கு முயன்ற தன்னை தற்கொலையிலிருந்து மட்டுமல்லாமல் பேரழிவிலிருந்து இறைவன் காப்பாற்றியதால் தீவிர மதபோதகராக மாறுகிறார் தனசேகர் என்கிற அற்புதம் (மிஷ்கின்). மருத்துவம் குணப்படுத்தாததை பிரார்த்தனை குணப்படுத்தும் என்பதை நம்பக்கூடியவர். பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர்.
காட்சிகளுக்கு ஏற்ற வசனங்கள் மூலமாகவும் கதை நகர்த்தப்படுகிறது. அதிலும் நான்கு பிரதான கதாபாத்திரங்கள் வெவ்வேறு தருணங்களில் பேசும் பின்வரும் வசனங்கள் அந்தக் கதாபாத்திரங்களின் கதையைச் சொல்வதோடு இயக்குநர் சொல்ல விழைந்த கருத்துக்கும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.
‘நான் அவனை லவ் பண்ணேன். ரொம்ப டிப்ரஸா இருந்தான். அதனால மேட்டர் பண்ணேன். அதுக்காக நான் ஐட்டம் இல்ல’ என்ற சமந்தாவின் வசனமும்,
‘நகம் வெட்டிக்கிற மாதிரி முடி வெட்டிக்கிற மாதிரி எனக்கு பிடிச்ச மாதிரி என் உடம்பை மாத்திகிட்டேன். இது தப்பா ஆயா?’ என்று ஷில்பாவாக நடித்த விஜய் சேதுபதியின் வசனமும்,
‘கடவுள் இல்லை கல்லுன்னு சொன்னதால கிடைச்சதா, இல்ல கடவுள் சிலைக்குள்ள இருந்துதான் கிடைச்சதுனால கடவுள் இருக்காருன்னு சொல்றதா ஒண்ணும் புரியல’ என்ற மதபோதகரான மிஷ்கினின் வசனமும்,
‘இதைப் பார்க்க லட்சம் பேரு இருக்குறதால நடிக்க நாலு பேரு இருக்கத் தான் செய்வாங்க. நடிச்சது தப்புன்னு சொல்ற யாரும் பார்த்தவங்களை தப்பு சொல்றது இல்ல’ என்ற ரம்யா கிருஷ்ணனின் வசனமும் நான்கு கதைகளுக்கான அம்சங்கள். இந்த நான்கு வசனங்களின் மேல்தான் திரைக்கதையின் கட்டுமானம் அமைந்துள்ளது.
கதை நடைபெறும் இடங்களும், அதைக் காட்சிப்படுத்திய கோணங்களும் அதில் ஒளி விளையாடும் இடங்களும் அற்புதம். ஒலியின் பங்களிப்பும் முக்கியமானது. குறிப்பாக ஷில்பாவுக்கு காவல் நிலையத்தில் ஏற்படும் கொடூரத்தின்போது பின்னால் ஒலிக்கும் இயந்திரத்தின் ஒலி பதற்றத்தை, பயத்தை ஏற்படுத்துகிறது.
ஆரண்ய காண்டத்தைப் போலவே இதிலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை சிறப்பு கவனம் பெறுகிறது. பழைய பாடல்கள் அந்தந்த இடங்களில் பொருத்தமாக கையாளப்பட்டுள்ளன.
விளிம்பு நிலை மனிதர்களைக் காட்சிப்படுத்தும்போது பரிதாபத்தை ஏற்படுத்த அல்லது பார்வையாளர்களை அவர்கள் பக்கம் நிற்கவைக்க புனிதப்படுத்தும்படியான காட்சிகள் உருவாக்கப்படும். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதைச் செய்யவில்லை. தனது குழந்தையைத் தொலைத்துவிட்டுத் தேடும் ஷில்பா கதாபாத்திரம் மும்பையில் குழந்தைக் கடத்தலில் தான் ஈடுபட்டது குறித்துக் கூறும் இடம் அதற்கு சிறந்த உதாரணம். அதன் பின்னரும் பார்வையாளர்களின் மனம் மீண்டும் ஷில்பாவின் பின்னால் அவளது குழந்தையைத் தேடி ஓடுவதும் அவளின் கண்ணீரைத் துடைக்க முயல்வதும்தான் நிகழ்கிறது.
ஒரே நாளில் இரு தொலைக்காட்சிகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் மூன்று மாணவர்கள் கொடுக்கும் அலப்பறைகளில் அரங்கமே சிரிப்பலையில் அலறுகிறது.
தன் மகனைக் காப்பாற்ற ரம்யா கிருஷ்ணன் நடத்தும் போராட்டம் உணர்வுபூர்வமானது. எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் பகத் பாசில், சமந்தா கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட துணிச்சலுக்காகவும் அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்காகவும் விஜய் சேதுபதியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மாஸ்டர் அஸ்வந்தின் நடிப்பும் கதாபாத்திரமும் அருமை. அல்பத்தனமான வில்லத்தனம் பகவதி பெருமாளின் ஒவ்வொரு சிரிப்பிலும் வெளிப்படுகிறது. இவர் சில நேரங்களில் நடிப்பில் அத்தனை வீரர்களையும் ஓரங்கட்டிவிடுகிறார்.
கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக அறிமுகமாகும் ‘அன்னிய’ கதாபாத்திரம் அதிர்ச்சி மதிப்புக்காகவும், படத்திற்கான விளக்கத்தைக் கூறுவதற்காகவும் உருவாக்கப்பட்டதோ என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸில் தோன்றும் மருத்துவர் கதாபாத்திரத்தின் பேச்சிலும் இந்த அவசரம் வெளிப்படுகிறது.
தாய்மை, தேசபக்தி, கற்பு, தூய்மை, கடவுள் நம்பிக்கை என அத்தனை புனிதங்களையும், பெருமிதங்களையும், நம்பிக்கைகளையும் படம் முழுக்க கட்டுடைக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இந்தக் கட்டுடைப்பு வலிய திணிக்கபட்ட பிரச்சார தொனியில் அல்லாமல் அன்றாட வாழ்வில் நிகழும் தருணங்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது.�,”