Vதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு…’

Published On:

| By Balaji

ரஜினியின் இந்த கபாலி வசனம், இப்போது ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருவருக்கு கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்றால் அது சத்திய நாராயணாவுக்குத்தான்.

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து இன்றைக்கு மிகப்பெரிய அமைப்பாக அவை இருப்பதற்குக் காரணமாக விளங்கியவர்களில் முக்கியமானவர் சத்திய நாராயணா. ரஜினியின் மனசாட்சி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட சத்திய நாராயணா, 2010 கால கட்டங்களில் திடீரென ரஜினிக்கு வேண்டாதவர் ஆகிப் போனார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஒதுக்க ஆரம்பித்த ரஜினி கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒட்டுமொத்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சத்திய நாராயணாவை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்துவிட்டார். ரசிகர்கள் சந்திப்பின் போது மூச்சுக்கு மூன்று முறை சத்தி என்று சொல்லும் ரஜினி அந்த சந்திப்பில் சத்தியின் பெயரைச் சொல்லவே இல்லை.

இப்படி ரஜினியை விட்டு முற்றுமுழுதாக வருடக் கணக்கில் விலகியிருந்த சத்திய நாராயணாவை இப்போது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சில வாரங்களாக அடிக்கடி பார்க்க முடிகிறது.

சத்திய நாராயணா மீண்டும் மக்கள் மன்றத்துக்கு வந்துவிட்டாரா என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.

“ரசிகர்களை மூலதனமாக வைத்துதான் ரஜினி கட்சியே தொடங்குகிறார். ரசிகர் மன்றங்களுக்குள் எந்த கோஷ்டிப் பூசலும் இருக்கக் கூடாது என்று அவர் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார். மன்றமாக இருக்கும்போதே அப்படி இப்படி இருந்த கோஷ்டிகள், கட்சியாக மலரும்போது கேட்கவே வேண்டாம். பல இடங்களில் பிரச்னை இருக்கிறது.

இதையெல்லாம் உணர்ந்த ரஜினி இதற்கு தீர்வு என்ன என்று யோசித்துத்தான், தானே சத்திய நாராயணாவுக்கு போன் போட்டிருக்கிறார். சில வருடங்கள் முன்பு உடல் நலக் குறைவு என்பதால் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தார் சத்திய நாராயணா. உடல் நலக் குறைவு மட்டுமல்ல காரணம், லதா ரஜினிகாந்த் தரப்பில் சத்திக்கு அதிக டார்ச்சர் கொடுத்தார்கள். இரு தலைக் கொள்ளியாய் மாறிய ரஜினி…சத்தியும் வேண்டும் லதாவும் வேண்டும் என்ற நிலையில் ஒருகட்டத்தில் சத்தியின் உடல் நிலையை காரணம் காட்டி அவரை சற்றி தள்ளியிருக்கச் செய்தார்.

அந்த ரஜினிதான் அண்மையில் சத்திக்கு போன் போட்டிருக்கிறார். ‘சத்தி உடனே கிளம்பி வாங்க’ இதுதான் ரஜினியின் ஒற்றை வாக்கியம்,

பழைய வருத்தங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு தலைவர் கூப்பிடறாரு என்ற மகிழ்ச்சியில் சத்தியும் ரஜினியை சந்தித்தார்.

அப்போது பல வருடங்களாக இருந்த கசப்பு தூக்கி எறியப்பட்டு மீண்டும் மன்றப் பணியை ஆற்ற வந்துவிட்டார் சத்தி” என்று காரணம் சொன்னவர்கள் தொடர்ந்தனர்.

“சில வாரங்களாக சத்தி தினமும் ராகவேந்திரா மண்டபத்துக்கு வருகிறார். அவரை மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திக்கிறார்கள். மூத்த நிர்வாகிகள் சத்திக்கு வலது கையாய் இருந்தவர்கள் மீண்டும் அவரோடு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்நாடு முழுதும் உள்ள மாவட்ட நிர்வாகிகளை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு சத்திக்கு அறிமுகமும், பரிச்சயமும் உள்ளது. தவிர சுமார் முப்பது வருட ரஜினியின் நிழலான அவருக்கு அழகிரி உட்பட பல விஐபிகளோடு நெருங்கிய நட்பும் தொடர்பும் இன்றும் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ரஜினி மன்றத்தில் அன்று சத்தியநாராயணாவின் கீழ் பணியாற்றிய பலர் இன்று காவல்துறையிலும் உளவுத்துறையிலும் பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளும் ரஜினியிடம் பேசமாட்டார்கள். ரஜினிக்காக சத்தியிடம்தான் பேசுவார்கள்.

நிர்வாகிகள் பிரச்னை, விஐபிகள் தொடர்பு, காவல்துறையினர் தொடர்பு என்று பன்முகத் தன்மை கொண்ட சத்தி இப்போது தனக்கு தேவை என்று ரஜினி முடிவெடுத்துவிட்டார். என்னதான் வருத்தம் இருந்தாலும் தலைவர் அழைப்பே தாரக மந்திரம் என்று சத்தியும் பழைய உணர்வோடு வந்துவிட்டார்.

ராஜு மகாலிங்கம், சுதாகர் போன்ற நிர்வாகிகள் செயலாற்றினாலும் சத்தியின் வேலைகளை சத்தியால் மட்டுமே செய்ய முடியும் என்பதால்தான் ரஜினி அவரை அழைத்து சில பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி முடித்தார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

**ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share