திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கனி சந்தையில் தக்காளியின் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி சந்தை தென் தமிழகத்தின் மிகவும் முக்கிய சந்தையாகும். உள்ளூர் விவசாயிகளிடமிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் காய்கறி மற்றும் பழங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 70 சதவிகித காய்கறிகள் இங்கிருந்துதான் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. மீதம் 30 சதவிகிதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தினமும் 4 முதல் 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாகக் காய்கறியின் விலை கடுமையாகக் குறைந்து வருகிறது.
ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக் காய் மற்றும் சத்திரப்பட்டி, காவேரியம்மாபட்டி, ஓடைப்பட்டி, வெரியப்பூர், கப்பல்பட்டி ஆகிய பகுதிகளில் தக்காளி விளைச்சலும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு, கரும்பு முருங்கை ரூ.45 ஆகவும், செடி முருங்கை ரூ.38 ஆகவும், மர முருங்கை ரூ.30 ஆகவும் விற்பனையானது. தற்போது வரத்து அதிகமாகி உள்ளதால் கரும்பு முருங்கை ரூ.14க்கும், செடி முருங்கை ரூ.12க்கும், மர முருங்கை ரூ.10க்கும் விற்பனை ஆகிறது. அதோடு தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரையில் விற்பனையான தக்காளி தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் தினகரன் ஊடகத்திடம் பேசுகையில், “தக்காளி ஒரு பெட்டி ரூ.70க்கு விற்பனையாகிறது. இதில் வாடகை, கமிஷன் என 25 ரூபாய் செலவாகிறது. மீதமுள்ள 45 ரூபாய் பறிப்புச் செலவுக்குச் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. மூன்று மாத விவசாயம், நாற்று மற்றும் உரம் எனச் செலவு செய்து பெரிய நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது” என்றார்.�,