தாஜ்மகாலைக்கூட மோடி விற்றுவிடுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதுபோலவே இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல்ஐசியின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பங்குகளை விற்று, நிதி திரட்ட இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இதைச் சாடியுள்ளார். டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜங்புரா பகுதியில் நேற்று (பிப்ரவரி 4) நடைபெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, “மேட் இன் இந்தியா என்ற பிரதமர் மோடியின் கோஷம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு தொழிற்சாலையைக்கூட அவர் அமைக்கவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வே, ஏன் ரெட் ஃபோர்ட் உட்பட அனைத்தையும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். ஒருநாள் அவர் தாஜ்மகாலையும் விற்கக் கூடும்” என்று விமர்சித்ததோடு, “அம்பானி மற்றும் அதானிக்கு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மோடி கொடுத்தார். இது நரேந்திர மோடி அரசு அல்ல. அம்பானி, அதானி அரசாக மாறியுள்ளது. இவர்கள் போன்ற 15 பேர்தான் மத்திய அரசால் பயனடைகிறார்கள். மக்கள் மிகுந்த பாதிப்படைகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “பாஜகவினர் இந்து தர்மத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் இஸ்லாம், சீக்கிய மதங்களும் குறித்தும் பேசுகிறார்கள். அவர்களுக்கு மதங்கள் பற்றி எந்த புரிதலுமே இல்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கிய மதங்களின் புனித நூல்களில் மற்றவர்களைத் தாக்கி, அவர்களை அடக்கு என்று எங்கே எழுதப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார். அதோடு பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஒன்றுமே செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.�,