Vதலைமைச் செயலகமா? கட்சி அலுவலகமா?

Published On:

| By Balaji

தலைமைச் செயலகத்தை முதல்வரும், துணை முதல்வரும் கட்சிப் பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். கட்சியில் இணைபவர்கள் கட்சியினுடைய தலைமை அலுவலகத்தில் சென்று நிர்வாகிகளை சந்தித்து இணைவர் அல்லது பொது மேடையில் விழாவில் இணைவர். ஆனால் கே.சி.பழனிசாமி தலைமைச் செயலகத்திற்குச் சென்று அதிமுகவில் இணைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இன்று (மார்ச் 9) கடிதம் எழுதியுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர் அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை. ஆனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, தான் சார்ந்த அதிமுக கட்சிப் பணிகளுக்காக, தலைமைச் செயலகத்தை, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் துணை போயிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

கே.சி.பழனிசாமி இணைப்பு நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி, “அதிமுகவுக்கு என தலைமைக் கழக அலுவலகம் சென்னையிலேயே, அதுவும் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் போது எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களது அதிகாரத்தை வேண்டுமென்றே துஷ்பிரயோகப்படுத்தி, தங்களது அரசியல் பணிகளுக்காக அரசு தலைமைச் செயலகத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தலைமைச் செயலாளராவது அவர்களுக்கு அந்த அடிப்படை விதிமுறையைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தை தவறாக பயன்படுத்தினால், அதற்கு தலைமைச் செயலாளரும் பொறுப்பாவார் என்று குறிப்பிட்டுள்ள அவர், “தமிழக ஆளுநர், இப்பிரச்சினையில் தலையிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share