இந்தியா, அறிவியல் தொழில்நுட்பத்தில் எவ்வளவுதான் முன்னேறிச் சென்றாலும் சுகாதாரத்தில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவே இல்லை. சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகள். தமிழகத்திலுள்ள 1000 கி.மீ. சாலையில் 1600 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று (20.06.2017) நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி சுற்றுச்சூழலைக் காக்க அவசியமானது. தமிழக அரசு சுற்றுச் சூழலை காக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கிட சாலை அமைக்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் கழிவு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 1035.23 கி.மீ. சாலைகளில் 1634.27 டன் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகளை அகற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களையும் இணைத்து அவர்களுக்கு பிளாஸ்டிக்குகளை பிரித்தல் மற்றும் சிறு துண்டுகளாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மண்ணைக் காக்க கட்டாயம் அரசாங்கம் வைத்துள்ள இந்தத் திட்டங்கள் மட்டும் போதாது. பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் 7 சதவிகித பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்காமல் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தடுக்க முடியாது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக்கிலிருந்து மாற்று இயற்கைப் பயன்பாட்டிற்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.�,”