புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நெல் ஜெயராமன் இன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால், ‘நெல் ஜெயராமன்’ எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்டார். மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, சேலம் சம்பா, சிகப்பு குருவிகார் போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை ஒற்றை ஆளாகத் தேடித் திரிந்து, அவற்றை மீட்டெடுத்துச் சக விவசாயிகளிடையே பிரபலப்படுத்தியவர். 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவிலான நெல் திருவிழாவை நடத்தி வந்தவர். இதற்காகத் தேசிய விருது, மாநில விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
**நம்மாழ்வாரின் நடைப்பயணத்தில்**…..
2003இல் நம்மாழ்வாரின் விவசாயிகள் நடைப்பயணத்தில் நெல் ஜெயராமன் கலந்துகொண்டார். நம்மாழ்வாரிடம் விவசாயிகள் கொடுத்த 7 வகையான நெல் விதைகளை, அவர் நெல் ஜெயராமனிடம் வழங்கினார். அப்போதுதான் பாரம்பரிய நெல் வகைகள் மீட்டெடுக்கும் பணி தொடங்கியது.
**நெல் திருவிழா நடத்துவது எப்படி?**
ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழாவைத் தொடங்கி, ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தி வந்தார். முதலில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் தனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மத்தியில் மட்டும் இந்த விழாவைத் தொடங்கினார். இவ்விழாவில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகள் இரண்டு கிலோ வழங்கப்படும். அதை எடுத்துச் செல்லும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்து, இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லில் நான்கு கிலோ விதைகளை ஜெயராமனிடமே திருப்பித் தர வேண்டும். இவ்வாறு பாரம்பரிய நெல் வகைகளை சக விவசாயிகளிடையே பரப்பினார். முதலில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட விழாவில் படிப்படியாக 5,000 பேர் வரை கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இளைஞர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். குறைந்தது 500 நெல் வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோள்.
**சுற்றுச்சூழலையும் பாதுகாத்தவர்**
மேற்கு பொய்கை நல்லூரில் ஆழிப் பேரலைகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பின் மாநில குழு உறுப்பினராக இருந்துகொண்டு கடற்கரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எண்ணற்ற போராட்டங்களில் கலந்துகொண்டவர் ஜெயராமன். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்த மீனவர்களுக்கும் கடற்கரைக்கும் எதிரான சட்டத்தை எதிர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார். பெட்காட் என்ற நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு அமைப்பில் செயல்பட்டு வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், கடந்த ஆண்டு திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழாவை நடத்தினார். கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்குத் தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் வழங்கினார். இது தவிர, அமைச்சர்களும் அவரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
நெல் ஜெயராமனின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் தேனாம்பேட்டை ரத்ன நகர் 2ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை (டிசம்பர் 7) மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ”தமிழக அரசு எப்போதும் ஜெயராமனின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கும்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் உற்ற பாதுகாவலனை இழந்துவிட்டனர் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அதேபோன்று பாமக நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
<img src="https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/image_arc/2018/12/06/57a.jpg" width="100%"
**ஸ்டாலின்**
நெல் ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
**கார்த்தி**
தேனாம்பேட்டையில் அவரின் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஒருவர் இறந்து போனதும் வந்து அஞ்சலி செலுத்துவது என்பதெல்லாம் இருக்கட்டும். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் சென்று பார்ப்பதுதான் அவர்களுக்கான மிகப்பெரிய ஆறுதல். அந்த அன்புதான் அவர்களுக்குத் தேவையான உண்மையான மருந்து. நெல் ஜெயராமன் விவசாயத்துக்காகப் போராடியவர். இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலையும் விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தியவர். இயற்கை விவசாயத்துக்காகத் தன் வாழ்நாளையே கொடுத்தவர்.
**விஷால்**
நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல் ஜெயராமன் ஐயா அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. விவசாயத்துறைக்கு அவரது பங்கு மகத்தானது. பல இளைஞர்களை விவசாயத்துக்கு வழிநடத்திச் சென்றவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு என் இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
**சிவகார்த்திகேயன்**
சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்துக்காக வெளிநாட்டுப் படப்பிடிப்பில் இருக்கிறார். ‘நெல்’ ஜெயராமன் மறைந்த தகவல் அவருக்குச் சொல்லப்பட்டது. இத்தகவலைக் கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளார். ஜெயராமனை ஊரிலிருந்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தது போல் இங்கிருந்து அவரது உடலைச் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு எடுத்துச் செல்லும் மொத்த செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவருடைய அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதிச் சடங்குகள் நடக்கும் வரை, கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தன் நண்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக அவரது மகனின் படிப்புச் செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
�,”