�ஜிஎஸ்டி விளம்பரங்களுக்கு இதுவரையில் ரூ.132.38 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) விளம்பரச் செலவுகளுக்கு இதுவரையில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில், “ஜிஎஸ்டி விளம்பரங்களுக்கு இதுவரையில் ரூ.132.38 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு ரூ.1,26,93,97,121 செலவிடப்பட்டுள்ளது. மின்னணு ஊடகங்களில் ஒரு ரூபாய் கூட செலவிடப்படவில்லை. வெளி ஊடகங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக ரூ.5,44,35,502 செலவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9ஆம் தேதியில் அளிக்கப்பட்ட பதிலில் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் *அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பீரோ* இந்தத் தகவல்களை அளித்துள்ளது. ஜிஎஸ்டி விதிகள் பற்றியும், ஜிஎஸ்டி நடைமுறை பற்றியும் பல்வேறு விளக்கங்கள் ஒரு பக்க அளவில் விளம்பரமாக வெளிவந்தது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இதற்கான விளம்பரத் தூதராகச் செயல்பட்டார்.�,