vசிபிஎம் நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்!

public

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி அசோக் ராஜ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்” என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டு சங்கரன்கோவிலில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். இரவு 10 மணி வரையிலும் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாத சூழ்நிலையில், கைதானவர்களின் உறவினர்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் அங்கு கூடியிருந்தனர். மார்க்சிஸ்ட் சங்கரன்கோவில் தாலுக்கா செயலாளர் அசோக் ராஜும் அங்கு இருந்துள்ளார். இதைப் பார்த்து அசோக் ராஜை கைது செய்ய உத்தரவிட்ட சங்கரன்கோவில் ஆய்வாளர் பாலாஜி, அவரைக் கடுமையாக தாக்கி ஆபாசமாகத் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 29) அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைத்திருந்த திருமண மண்டபத்துக்கு வந்த, சங்கரன்கோவில் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி, கூடி இருந்தவர்களைப் பார்த்து இங்கு யாரும் நிற்கக்கூடாது என்று கூறிக்கொண்டே, அசோக் ராஜைப் பார்த்து இவனை தூக்கி உள்ளே போடுங்கள் என்று கத்தினார். எந்தத் தவறும் செய்யாத அசோக் ராஜை ஏன் பிடிக்கிறீர்கள் என்று அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கேட்டதற்குப் பிறகும் அதைப் பொருட்படுத்தாமல், அசோக் ராஜைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் வேனில் ஏற்றி, காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கைவிலங்கு மாட்டி, குடிப்பதற்குத் தண்ணீர்கூட தராமல், நள்ளிரவில் இருந்து விடியற்காலை வரை காவல் ஆய்வாளர் பாலாஜி அசோக் ராஜைக் கடுமையாகத் தாக்கி ஆபாசமாகத் திட்டியிருக்கிறார். கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், “எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் வெறுப்பின் காரணமாகவும் மனித உரிமைகளை மீறியும், மிகவும் கண்மூடித்தனமாகவும், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளார் காவல் துறை ஆய்வாளர் பாலாஜி. காவல் துறையில் சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை ஆர்ப்பாட்டங்களில் சுட்டிக்காட்டி அசோக் ராஜ் பேசுவதை மனதில் வைத்து வஞ்சம் தீர்க்கும் வகையிலேயே அசோக் ராஜ் அவர்களைத் தாக்கியுள்ளார்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சங்கரன்கோவில் ஆய்வாளர் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், அசோக் ராஜ் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்ப பெற வேண்டுமெனவும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்களை கைது செய்யும்போது குறிவைத்து காவல் துறையினர் தாக்கி வருவதாகத் தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் நிர்வாகி தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *