மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் ரூபா ஐபிஎஸ், அதிகாரிகள் கவனத்துக்கு என்று கூறி வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கப் பறக்கும் படை, வருமான வரித் துறை எனச் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கார், அரசு பேருந்து, விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் 208 கோடி உட்பட நாடு முழுவதும் ரூ. 1460.02 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் 340.74 கோடி ரொக்கமும், 143.84 கோடி ரூபாய் மதுபான வகைகளும், 692.64 கோடி ரூபாய் போதைப் பொருட்களும், 255 கோடி ரூபாய் தங்க வெள்ளி நகைகளும் அடங்கும்.
இந்நிலையில் கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் டிஐஜியும், பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தியவருமான ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பணப்பட்டுவாடாவைத் தவிர்க்க [வீடியோ](https://twitter.com/i/status/1112754924201410560) ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்காளர்களைக் கவரப் பயன்படுத்தும் நூதன வழிகள் இவை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனிக்கவும் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்ட 30 நொடி வீடியோவில் சப்பாத்திக்குள் ரூபாய் நோட்டுகளை வைத்துச் சமைப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ டிக் டாக் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே வலம் வந்தாலும் தேர்தல் சமயத்தில் ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.�,