அரசு ரகசிய சட்டத்தை மீறியதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மியான்மரில் ரோஹின்யா மக்கள் அதிகளவு படுகொலை செய்யப்படுவது தொடர்பாக ராய்ட்டர்ஸ் ஊடகத்தைச் சேர்ந்த வா லோன் மற்றும் க்யூ ஸோ ஓஓ ஆகிய செய்தியாளர்கள் புலன் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்தஆண்டு டிசம்பரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். காலனித்துவ காலத்து சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் 14ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.
இவர்கள் மீதான வழக்கில் கடந்த திங்களன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. எனினும், நீதிபதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் லிங் இன்று (செப்டம்பர் 3) தீர்ப்பு வழங்கினார். “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசு ரகசிய சட்டப் பிரிவு 3.1 சியை மீறி உள்ளனர். எனவே அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி அறிவித்தார்.
இந்த தீர்ப்பு ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றிற்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஸா மவுங் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மியான்மருக்கான ஐக்கிய நாடுகளின் குடியுரிமை மற்றும் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் நட் ஆஸ்ட்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ அமைதி, நீதி மற்றும் மனித உரிமை ஆகியவற்றுக்கு ஊடக சுதந்திரம் என்பது அவசியமானது. நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால் நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம்.. செய்தியாளர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
�,”