நீதிபதிகளின் நியமனத்தில் அனுபவத்தைக் கணக்கில் எடுப்பது நீண்ட நாட்களாக வழக்கத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகளின் மீது அவதூறுகளை வாரியிறைக்கும் போக்கு அபாயகரமானது என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தற்போதைய நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்து என்டிடிவிக்கு பேட்டியளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் நீதிபதிகளை விமர்சிக்கும் போக்கு தற்போது பெருகியுள்ளதாகக் கூறியவர், தீர்ப்புகளையும் சட்டம் சார்ந்த குறைபாடுகளையும் விமர்சனம் செய்யுமாறு தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “தீர்ப்புகளை எழுதிய நீதிபதிகளைத் தாக்கிப் பேசும் போக்கு தற்போது பெருகி வருகிறது. அதற்கான காரணங்களைப் பட்டியலிடுவது தொந்தரவுபடுத்துவதாக உள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக அவதூறுகளை வாரியிறைப்பது அபாயகரமான போக்கு ஆகும்.
இதனைப் பார்க்கும் திறமையுள்ள இளம் தலைமுறையினர் நீதிபதிகளாக விரும்பமாட்டார்கள். நீதி வழங்கும் தன்மையை நோக்கி இளம் தலைமுறையினரை அழைத்துவருவது கடினமானதாக உள்ளது. நாங்கள் நன்றாகச் சம்பாதிக்கிறோம், நாங்கள் ஏன் நீதிபதிகளாகி அவதூறுகளை எதிர்கொள்ள வேண்டுமென்று கேட்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார் ரஞ்சன் கோகாய்.
கடந்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் பொறுப்பேற்றனர். அதே நேரத்தில், நீதிபதிகள் பிரதீப் நந்த்ரஜோக், ராஜேந்திர மேனன் ஆகியோரது பெயர்கள் கொலீஜியத்தின் பரிந்துரையில் இடம்பிடித்து கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இது விமர்சனத்துக்கு உள்ளானது. இது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ரஞ்சன் கோகாய், இது வழக்கமானது தான் என்றார்.
“கொலீஜியத்தில் முடிவெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டால் மட்டுமே அது தீர்மானமாகும். அது இணையதளத்திலும் பதிவு செய்யப்படும். அரசுக்கு அனுப்பும் முன்னர் பல்வேறு முடிவுகள் மாற்றத்துக்கு உள்ளாகும். அதற்குப் பின்னிருக்கும் காரணங்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. அதேபோல, அனுபவ மூப்பைக் கருத்தில் கொள்வதும் புதிதல்ல. அதற்காக, கொலீஜியத்தில் பேரம் நடப்பதாகக் கூறிவிடக் கூடாது. பல நேரங்களில் தகுதியை விட அனுபவ மூப்பு கருத்தில் கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் கொலீஜியத்தின் பரிந்துரைகள் நீண்ட காலம் காத்திருப்பில் இருப்பதாகக் கூறப்படுவதும் உண்மையல்ல என்று தெரிவித்த ரஞ்சன் கோகாய், சமீபத்தில் கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளுக்கு உடனடியாகப் பிரதமர் அலுவலகம் பதில் அளித்ததாகத் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தான் 2016ஆம் ஆண்டில் இருந்து கொலீஜியத்தில் பொறுப்பு வகிப்பதாகவும், அதில் முறைகேடுகள் எதுவும் இதுவரை நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.�,