தனியன்
தேர்தல் காலப் பிரச்சாரப் படங்களில் சிலது தானாய்த் தட்டுப்படும். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் படங்களில் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் நடைப் பயிற்சியின்போது, மக்களை நேரடியாகச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு திரட்டியபோது எடுக்கப்பட்ட பல படங்களைத் தனது Facebook பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதிலொரு படம் இது.
இந்தப் படத்தில் வெளிப்படும் ஸ்டாலினின் எளிமை, பாமரனிடமும் இயல்பாய் பழகும் தன்மையை பலரும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவரிடம் அந்தச் சிறப்புகள் இருப்பது உண்மைதான். அது சமீபகாலமாக மேம்பட்டுக்கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய, பாராட்டுக்குரிய செய்திதான். ஆனால் அவையெல்லாமே ஸ்டாலின் என்கிற தனிநபரின் சிறப்பியல்புகள். அத்தகைய தனிநபர் சிறப்பியல்புகளையும் தாண்டி இந்தப் படம் வேறொரு அதிமுக்கிய விஷயத்தை ஆவணப்படுத்துகிறது.
**மஞ்சப்பை சொல்லும் சேதி**
இந்தப் படத்திலேயே மிக முக்கியமானது அந்த மஞ்சப்பை. அது இயல்பாய்க் கூறிச்செல்லும் செய்தி முக்கியமானது. குறிப்பாக நம் சமகால அரசியலில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வார்த்தைகள் போதாது.
இந்தப் படத்தில் ஸ்டாலினிடம் சிரித்தபடி கைகுலுக்குபவர் முஸ்லிம் என்பதை அவரது தாடியும் குல்லாவும் குறிப்புணர்த்துகின்றன. அவரது இரு சக்கர வாகனத்தில் மாட்டப்பட்டிருக்கும் மஞ்சப்பையில் முருகன் சர்வ அலங்காரங்களோடு சிரித்தபடி அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் ஸ்டாலின் என்பவர் நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் அரசியல் வாரிசு. அவரிடம் மகிழ்ச்சியோடு கைகுலுக்குபவர் தமிழக சிறுபான்மை மக்களின் பிரதிநிதி. மஞ்சப்பையில் இருக்கும் முருகன் தமிழ்நாட்டில் நிலவும் மதச்சார்பற்ற அரசியலின் குறியீடு. இந்தத் தேர்தலின் அடிப்படைப் பிரச்சினையான மதச்சார்பின்மையை இந்தப் படம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது.
படத்தில் இணைந்திருக்கும் இரு கைகளும் இதே நட்புடனும் புரிதலுடனும் ஆழ்ந்த அன்புடனும் தேர்தலிலும் இணைந்தால் மட்டுமே தமிழ்நாட்டின் மதசார்பற்ற அரசியலைத் தக்கவைக்க முடியும் என்பதை இந்த மஞ்சப்பை முருகன் சொல்லாமல் சொல்கிறார்.
**நல்லிணக்கத்தில் நிலம்**
உண்மையில் கடவுளை நம்பும் ஒரு சராசரி இந்துவுக்கு இஸ்லாமியப் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வெளியில் வரும் குல்லா போட்ட முஸ்லிம்களிடம் தம் குழந்தைகளைக் காட்டி அவர்கள் காதில் ஓதச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.
குழந்தைளின் செவிகளில் அல்லாவின் திருமந்திரங்கள் விழுவதை அவர்கள் தீட்டாகப் பார்ப்பதில்லை. மாறாக இறையருளாகவே அவர்கள் அதை ஏற்கிறார்கள். இன்றளவும் இது நீடிக்கிறது. தமிழ்நாடு முழுக்க கிராமம், நகரம் என்கிற வித்தியாசமில்லை. மேலும் தமிழ்நாட்டில் தர்காக்களுக்குப் போகும் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்.
அதேபோலத்தான் இந்துக் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம்களுக்கு இன்னமும் பரிவட்டம் கட்டி மாலை போட்டு மரியாதை செய்யும் கோவில்கள் பல உண்டு. இந்து கோவில் தேர்த் திருவிழாக்களுக்குக் கொடை கொடுக்கும் முஸ்லிம் செல்வந்தர்கள் பலருண்டு இதே தமிழ்நாட்டில்.
இந்த இரு தரப்பாருக்கும் மதசார்பின்மை, மதசகிப்புத்தன்மை என்பது வெறும் கோஷமல்ல; அன்றாட வாழ்வியல். எந்தக் கடவுளுமே தம்மைக் கொல்லும் கொலைக் கருவியல்ல என்கிற புரிதல் இயல்பாகவே இரு தரப்பாரிடமும் இருக்கிறது. ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக திராவிடம் அதைத் திட்டமிட்டு ஊக்குவித்து எருபோட்டு வளர்த்துவைத்திருக்கிறது.
**நொறுங்கிப்போன நல்லிணக்கம் **
ஆனால் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்து அங்கே ராமர் கோவில் கட்ட எல்கே அத்வானி, மோடி போன்றவர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு என்று தனது ரத யாத்திரையைத் துவங்கினாரோ அன்று ஆரம்பித்தது உண்மையான சிக்கல்.
அத்தோடு தமிழ்நாட்டில் பிள்ளையாரும் ராமரோடு சேர்ந்துகொண்டார். அமைதியாக வீட்டுக்குள் கொழுக்கட்டையைத் தின்றுவிட்டு மூன்றாம் நாள் கிணற்றிலோ, குளம் குட்டைகளிலோ, ஆற்றிலோ, கடலிலோ கரைந்து காணாமல் போய்க்கொண்டிருந்த சாதுவான பிள்ளையார் நூறடி, இருநூறடி உயரத்துக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையாராக விபரீத விஸ்வரூபம் எடுத்தார். எல்லா வித ஆயுதங்களையும் கையில் ஏந்தி முஸ்லிம்களின் தர்கா இருக்கும் தெருவில் அவர்கள் தொழுகை நடத்தும் நேரமாக பார்த்து அங்கே போய் மசூதிக்கு முன் மேளமடித்தே தீருவேன் என்று“பிள்ளையார்” பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்ததும் ஆபத்து பேராபத்தானது; பிளவோ பெரும் பிளவானது.
இந்த அராஜகங்களுக்கு பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என்று இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு பகுதியினர் வஹாபியிச வன்முறை தத்துவத்தை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தனர். விளைவு“தூய்மைவாத இஸ்லாமிய வாழ்நெறிகள்” வலியுறுத்தப்பட்டன. “வணக்கம்” என்று சொல்லாதே, தர்காக்களை இடிப்போம் என வம்புக்கு பதில் வம்பு வளர்க்க இறுதியில் ஈடுசெய்ய முடியாத இழப்பென்னவோ முஸ்லிம் தரப்புக்கே.
எந்த அளவுக்கென்றால் மாநிலத்தின் இரண்டு பிரதான கட்சிகளான திராவிடக் கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளில், அதிமுக கூட்டணியில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை. திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் திமுக கட்சி வேட்பாளர்களில் யாருமே முஸ்லிம் இல்லை.
இந்த விபரீத நிலை மாற வேண்டுமானால் தமிழக அரசியலும் இந்திய அரசியலும் 1992ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைமைக்கு மாற வேண்டும். அல்லது மாற்றுவதற்கான பயணத்தையாவது துவக்க வேண்டும். மதசார்பற்ற அரசியலை நாம் மீட்டேயாக வேண்டும்.
மத நம்பிக்கைகள் ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது அந்தக் குறிப்பிட்ட மனிதனுக்கும் அவர் நம்பும் கடவுளுக்கும் இடையிலான நம்பிக்கை அல்லது பிணைப்பாக மட்டுமே இருந்தாக வேண்டும். அரசியல் பூசாரிகளுக்கு அதில் எந்த இடமும் இருக்கக் கூடாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக நிறுவ வேண்டும்.
இந்தப் படம், இது சொல்லும் செய்தி, அதனால் உருவாகும் நம்பிக்கை தமிழக, இந்திய அரசியல் அதை நோக்கிப் பயணிக்கத் துவங்கியிருப்பதற்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. காத்திருப்போம். நம்பிக்கை தரும் நல்லதொரு சிசுவையே காலம் தன் கருவில் சுமக்கிறாள் என்கிற எதிர்பார்ப்போடு.�,