திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, விவசாயிகள் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் ராமதாஸ், ‘திருச்சியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் விவசாயிகள் எவரும் வறுமை அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள வில்லை என்றும், குடும்பப் பிரச்னைகளால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் இறப்பைக் கொச்சைப்படுத்தும் ஜெயலலிதாவின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது. கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னிலிருந்து 1000 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரும்பு உற்பத்தி ஏற்கனவே இருந்ததில் பாதியாக, அதாவது 245 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கருப்பு சாகுபடி பரப்பும் பாதியாக குறைந்துவிட்டது. கரும்பை பொறுத்தவரை இதுதான் 5 ஆண்டுகளில் ஜெயலலிதா படைத்த சாதனையாகும். அதேபோல், தமிழகத்தில் இரண்டாம் விவசாயப் புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்டு, வேளாண் துறையில் 9% வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், வேளாண் துறை வளர்ச்சி மைனஸ் 12.1% (-12.1%) ஆக குறைந்துவிட்டது. விவசாயிகளுக்கு வருமானம் குறைந்ததுடன், ஈட்டிய வருமானமும் கிடைக்காததால்தான் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 2423 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில், விவசாயிகள் எவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. குடும்பப் பிரச்னையால்தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறுவது விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும். கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உழவர்கள் தற்கொலை குறித்த வினாவுக்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன்சிங், ‘ஆண்மைக் குறைவு, காதல் தோல்வி உள்ளிட்ட காரணங்களால்தான் உழவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’ என்று கூறினார். இந்தக் கருத்துக்களுக்கும், ஜெயலலிதா திருச்சியில் நேற்று பேசிய கருத்துக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. உழவர்கள் எந்த இழிவையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற ஆணவத்தில் கூறப்பட்ட கருத்துக்கள்தான் இவை. உழவர் சமுதாயத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதற்கு இதுதான் உதாரணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
�,