எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கு மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி டெல்லியில் *உலக வங்கி*, *உலக வளங்கள் நிறுவனம்* மற்றும் *ஆற்றல் திறன் சேவைகள் நிறுவனம்* இணைந்து தொடங்கிய *இன்னொவேட் டூ இன்ஸ்பயர்: கிரியேட்டிங் பியூச்சர் எனர்ஜி சொலூசன்ஸ்* என்ற நிகழ்ச்சியில் மத்திய மின்சாரத் துறை செயலாளரான ஏ.கே.பல்லா கலந்துகொண்டு பேசுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டைப் பொறுத்துத்தான் சார்ஜிங் மையங்களை எந்த அளவுக்கு அமைக்க முடியும் என்பதை நாம் பார்க்க முடியும். ஏனெனில், சார்ஜிங் மையங்களை அதிகமாக அமைத்துவிட்டு, குறைவான எலெக்ட்ரிக் வாகனங்கள் இருந்தால் அது தேவையற்றதாகும். அதேபோல, பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு ஏற்ப சார்ஜிங் மையங்களும் போதுமான அளவில் இருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக் வாகனத் துறைக்காக நாங்கள் புதிய கொள்கை ஒன்றை வடிவமைத்து வருகிறோம். அதில், சார்ஜிங் மையங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்குவதற்கான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். சார்ஜிங் மையங்கள் என்பவை சேவைகள் சார்ந்ததாகும்; எனவே அவற்றை அமைப்பதற்கான உரிமங்களைப் பெறத் தேவையில்லை என்ற நோக்குடன் இப்புதிய கொள்கை இருக்கும். இந்த சார்ஜிங் மையங்களுக்குத் தேவையான மின்சாரம் விநியோகிக்கப்படும். சார்ஜிங் உள்கட்டுமானப் பணிகளுக்கான தொழில்நுட்ப வரைமுறைகளை நாங்கள் வகுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் அதிகரித்துவருவதால் மின் விநியோகத்துக்கும் மின் உற்பத்திக்கும் உண்டான இடைவெளி குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.�,