தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது கடந்த மூன்று நாட்களாக போலீசார் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இதற்கிடையே போராட்டம் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்க, தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையச் சேவையை முடக்கி தமிழக அரசு நேற்று (மே 23) உத்தரவிட்டது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் சூரிய பிரகாசம் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், காயம் பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும்; துப்பாக்கிச் சூட்டின்போது பொதுமக்களைச் சுட்டவர்களை அடையாளம் காட்ட மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்; கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மதியம் 2.15 மணியளவில் விசாரிக்கப்படவுள்ளது.
**ஸ்டெர்லைட்க்கு மின் இணைப்பு துண்டிப்பு**
இந்நிலையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு காலை 5.30 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று வீட்டில் இருக்கும் ஆண்களை போலீசார் தாக்கும் [வீடியோ காட்சி வெளியாகி]( https://twitter.com/sjeeva26/status/999369638076080128) பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களை மட்டுமல்லாமல், பெண்களையும் சிறுவர்களையும் தாக்கியுள்ளனர். இனி இந்த ஊரில் ஒருத்தரும் போராடக் கூடாது என்று போலீசார் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
�,”