கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சாயப்பட்டறை ஆலைகள் கழிவுகளை நொய்யலாற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து நுரை பொங்கி வழிகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நொய்யலாற்றில் திறந்து விடுகின்றன. கோவை மாவட்டத்திலுள்ள நகைப் பட்டறைகளும் தங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நொய்யலாற்றில் கலக்கவிட்டு இருக்கின்றன. இதனால் நொய்யலாற்றில் வெண் நுரை பொங்கி வழிவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புட்டுவிக்கி பகுதியில் செயல்படும் சலவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நுரையானது ஆத்துப்பாலம், கரும்புக் காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதால் தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தோலில் நுரைபட்டு அரிப்பு உண்டாகி, புண் ஏற்படுவதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், ஆலைகள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்ற வருடம் நொய்யலாற்றில் நுரை பொங்கி ஓடுவதற்குக் கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன், நொய்யலாற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளின் சாக்கடைக் கழிவுகள்தான் கலந்துள்ளன. பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டுக் குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால்தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது. என்று கூறியிருந்தார்.�,