கர்நாடகாவில் காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் முதல்வர் குமாராசாமிக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் அம்மாநில அரசின் நிலைத் தன்மை குறித்து மீண்டும் பரபரப்புகள் ஏற்பட்டுள்ளன.
கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 3 பேருடன் மும்பை ஓட்டல் ஒன்றில் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 2008 போல மீண்டும் ஆபரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தை பாஜக செயல்படுத்த இருப்பதாகவும் ஒருவாரமாகவே கர்நாடக அரசியலில் பேசப்பட்டது. அதேநேரம் பாஜக தனது 104 எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இந்த காட்சிகளுக்கு இடையே முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வந்த ரெனபென்னூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஷங்கர், முல்பகல் சட்டமன்ற உறுப்பினர் நாகேஷ் ஆகிய இரு சுயேச்சை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுபற்றி கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா நிருபர்களிடம் பேசுகையில், “அவர்கள் சுயேச்சை உறுப்பினர்கள். அந்த அடிப்படையில் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அதில் யாரும் தலையிட முடியாது” என்றார்.
முதல்வர் குமாராசாமியோ ஒரு படிமேலே போய், “இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் என்ன ஆகப் போகிறது? எங்கள் பெரும்பான்மையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. நான் மிகவும் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன். எங்கள் பலம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஒருவாரமாக மீடியாக்களில் வந்துகொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்வது?” என்று கேட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன. 104 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்த போதிலும், போதிய பெரும்பான்மை இல்லாததால் பாஜகவால் ஆட்சியமைக்க இயலவில்லை. அதேபோல 80 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்த போதும், 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெரும்பான்மைக்கு 113 பேரின் ஆதரவு வேண்டிய நிலையில் இப்போது குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவோடு சேர்த்து 117 பேர் இருக்கிறார்கள். பாஜக தனது 104 சட்டமன்ற உறுப்பினர்களோடு இன்னும் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வலை வீசி இழுத்து ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது என்றும் அதன் முதல்கட்டமாகவே இரு சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.
�,