எங்களைப் பார்த்தால் மிரட்டுபவர்கள் போலா தெரிகிறது என்றும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போல் செயல்படுவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் வாபஸ் பெற்றுள்ள நிலையில், தற்போது அவர்கள் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலுள்ள கூர்க் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதற்கிடையே தமிழக போலீசார் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதகாவும் தகவல் வெளியாகியது. இதனால் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அணி மாறுவதற்காக ரூ.20 கோடி வரை போலீஸார் மூலம் பேரம் பேசுகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வேண்டும் இல்லாவிட்டால், உங்கள் மீது பொய் வழக்குப் போடப்படும் என்றும் போலீஸார் மிரட்டுகின்றனர் என்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று( செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “தங்களை மிரட்டுவதாக யார் வேண்டுமானாலும் கூறலாம், எங்களைப் பார்த்தால் மிரட்டுகிறவர்கள் போலா தெரிகிறது. அவர்கள்தான் எல்லையை மீறி முழுமையான அளவுக்கு அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, அரசு நீடிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு, அனைத்து விதமான சகுனி வேலைகளையும் செய்து வருகிறார்கள்.எனவே தர்மம்தான் வெல்லும்” என்று தெரிவித்தார்.�,