பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தனது தாய் தந்தை பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது ஐஆர்சிடிசி ஊழல், கால்நடை தீவன ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு ஐஆர்சிடிசி ஊழல் வழக்கில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. லாலுவுக்குப் பிறகு ராஷ்டிரீய ஜனதா தள கட்சிக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவே அடுத்த வாரிசாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டார். இதனால், தேஜஸ்விக்கும் அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கட்சியின் மாணவர் பிரிவு ஆலோசகர் பதவியிலிருந்து தேஜ் பிரதாப் கடந்த வாரம் விலகினார்.
கட்சியிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த தேஜ் பிரதாப், எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுபவர்களுக்கே எதுவும் தெரியப்போவதில்லை என்று தனது சகோதரரைச் சாடியிருந்தார். மேலும் நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராஷ்டிரீய ஜனதா தளத்திலிருந்து விலகிய ஒரே வாரத்தில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தனது தந்தை பெயரில் முதல் வார்த்தையையும், தாய் ராப்ரி தேவி பெயரில் முதல் வார்த்தையையும் இணைத்து லாலு ராப்ரி மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.
முன்பாக பிரச்சாரம் அல்லது பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் லாலு பிரசாத் யாதவ், ஆலு (உருளைக்கிழங்கு) இல்லாமல் எப்படி சமோசா இருக்காதோ, அதுபோன்று லாலு இல்லாமல் பிகார் இருக்காது என்று கூறுவார். அதற்கேற்ற வகையில் தேஜ் பிரதாப் தனது தாய் தந்தை பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி நேற்று அறிவித்திருக்கிறார்.
40 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில் வரும் பொதுத் தேர்தலில், சியோஹர் மற்றும் ஜெஹானாபாத் ஆகிய தொகுதிகளுக்குத் தனது விருப்ப வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் தேஜ் பிரதாப். இது ஏற்றுக்கொள்ளப்படாததை அடுத்து, தனியே கட்சித் தொடங்கியுள்ள அவர், ஜெஹானாபாத் தொகுதியில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் சுரேந்திர யாதவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ள சுயேச்சை வேட்பாளர் சந்திரபிரகாஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதவிர, தனது விருப்ப ஆதரவாளருக்கு, சியோஹர் தொகுதியில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை எனில் 40 தொகுதிகளிலும் லாலு ராப்ரி மோர்ச்சா தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
�,”