�
இந்தியாவின் மற்ற முன்னணி நகரங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லியில் வருமான வரி வசூல் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவின் தொழில் தலைநகரம் என்று அழைக்கப்படுவது மும்பையாகும். நாட்டின் ஒட்டுமொத்த வருமான வரி வசூலில் 29 விழுக்காட்டுப் பங்கை கொண்டு முதலிடத்தில் இருப்பதும் மும்பைதான். ஆனால் இப்போது மும்பையின் வருமான வரி வசூல் மற்ற நகரங்களைக் காட்டிலும் வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. அதேவேளையில் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் 13 வரையிலான டெல்லியின் வருமான வரி வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. மும்பையில் 5 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் ஒட்டுமொத்த வரி வசூலில் டெல்லியின் பங்களிப்பு 16.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான இதே 7 மாத காலத்தில் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட மற்ற முன்னணி நகரங்களிலும் வருமான வரி வளர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் *டி.என்.என்.* ஊடகத்திடம் கூறுகையில், “நாடு முழுவதும் ரீஃபண்ட் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பையில்தான் அதிகமானோருக்கு ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “மும்பையைக் காட்டிலும் டெல்லியில் ரீஃபண்ட் பெற்றவர்கள் குறைவுதான். எவ்வளவு பேருக்கு ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளது என்ற முழுத் தகவல்கள் உடனடியாகக் கிடைக்காது” என்றார்.�,